பெங்களூரில் ஆலங்கட்டி மழை சுவர் விழுந்து ஆட்டோ டிரைவர் பலி
பெங்களூரில் ஆலங்கட்டி மழை சுவர் விழுந்து ஆட்டோ டிரைவர் பலி
ADDED : மே 30, 2026 02:44 AM

பெங்களூரு: பெங்களூரின் பல்வேறு இடங்களில், நேற்று மாலை ஆலங்கட்டி மழை பெய்தது. சாலைகள் ஏரிகளாக மாறின. பொது மக்கள், வாகன பயணியர் அவதிப்பட்டனர். சுவர் விழுந்து, ஆட்டோ டிரைவர் பலியானார்.
பெங்களூரில் சில நாட்களாக, மாலை நேரத்தில் மழை பெய்கிறது. நேற்று காலை முதலே மேகமூட்டமான வானிலை இருந்தது. மாலை 6:30 மணியளவில் ஆலங்கட்டியுடன் கூடிய, பலத்த மழை பெய்தது. பணி முடிந்து வீடு திரும்பும் நேரத்தில், மழை பெய்ததால் வாகன பயணியர், பொது மக்கள் பெரும் அவதிப்பட்டனர்.
சதாசிவநகர், மேக்ரி சதுக்கம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், மெஜஸ்டிக், சேஷாத்திரிபுரம், ரேஸ்கோர்ஸ், ராஜாஜி நகர், மல்லேஸ்வரம், சிவாஜி நகர், வசந்தநகர், கார்ப்பரேஷன், கே.ஆர்.மார்க்கெட், யு.பி., சிட்டி, ரிச்மெண்ட் சதுக்கம், சிவானந்த சதுக்கம், ஜெயநகர், பேலஸ் குட்டஹள்ளி, லால்பாக், ஜெ.பி.நகர், பனசங்கரி, பன்னரகட்டா சாலை, மல்லேஸ்வரம், யஷ்வந்த்பூர், விஜயநகரா உட்பட, பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்தது.
சேஷாத்திரிபுரம் பிரதான சாலை, வெள்ளக்காடாக மாறியது. சாலையில் தண்ணீர் பாய்ந்தோடியது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால், வாகனங்கள் சிக்கிக்கொண்டு மக்கள் அவதிப்பட்டனர். தாழ்வான பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால், மக்கள் பரிதவித்தனர்.
விஜயநகரில் பெய்த மழைக்கு அங்குள்ள கிளப்பின் சுற்றுச்சுவர் இடிந்து சாலையோரம் நின்ற ஆட்டோ மீது விழுந்ததில், ஆட்டோ டிரைவரான கங்கொண்டனஹள்ளியின் சிவபோரய்யா, 56 என்பவர் உயிரிழந்தார்.
