கூடுதலாக பணம் அனுப்பிய பயணி திருப்பி அனுப்பிய ஆட்டோ ஓட்டுநர்
கூடுதலாக பணம் அனுப்பிய பயணி திருப்பி அனுப்பிய ஆட்டோ ஓட்டுநர்
ADDED : ஜூன் 06, 2026 11:29 PM
பெங்களூரு: ஆட்டோ வாடகை கட்டணத்துக்கு, 150 ரூபாய்க்கு பதிலாக, 15,000 ரூபாய் செலுத்திய பயணியால் ஆட்டோ ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்தார். அந்த பணத்தை அவர் திருப்பி அனுப்பினார்.
பெங்களூரை சேர்ந்த நபர் ஒருவர், சில நாட்களுக்கு முன், பணி நிமித்தமாக, ஒரு இடத்தில் இருந்து, மற்றொரு இடத்துக்கு செல்ல வேண்டியிருந்தது. எனவே ஆட்டோவில் பயணித்தார். குறிப்பிட்ட இடம் வந்ததும், ஆட்டோவை நிறுத்தி இறங்கினார். எவ்வளவு கட்டணம் என கேட்ட போது, 150 ரூபாய் என, ஆட்டோ ஓட்டுநர் கூறினார்.
அந்த நபர் மொபைல் போன் மூலமாக, 'போன் பே' செய்தார். ஆனால் அவசரத்தில், 15,682 ரூபாய் பரிமாற்றம் செய்துவிட்டார். அதற்குள் ஆட்டோ ஓட்டுநர் சென்று விட்டார். பின்னர் தான், அந்த நபருக்கு தான் செய்த தவறு புரிந்தது. ஆட்டோ ஓட்டுநருக்கு போன் செய்தார். அவர் போனை எடுப்பாரா,இல்லையா, தன் பணம் கிடைக்குமா என, அந்த நபர் கலக்கம் அடைந்தார்.
ஆனால், ஆட்டோ ஓட்டுநர், போனை எடுத்தது மட்டுமின்றி, கூடுதல் பணம் வந்ததை ஒப்புக்கொண்டு, கட்டணம் போக, மீதமிருந்த தொகையை உடனடியாக பயணிக்கு, பரிமாற்றம் செய்தார். தனக்கு சொந்தமில்லாத பணம், தனக்கு தேவையில்லை எனவும், கூறினார்.
பயணி தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அவர் கூறியதாவது:
நான் தவறுதலாக அனுப்பிய கூடுதல் தொகை, எனக்கு திரும்ப கிடைக்கும் என, நான் நம்பவில்லை. ஆனால், ஆட்டோ ஓட்டுநர், அந்த பணத்தை எனக்கு திருப்பி அனுப்பினார்.
அவரது நேர்மையான குணம் பாராட்டத்தக்கது. இது போன்ற சம்பவங்கள், மனிதர்கள் மீதான நம்பிக்கையை, மேலும் அதிகரிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தகவல் பரவியுள்ளது. ஆட்டோ ஓட்டுநரை பலரும் பாராட்டியுள்ளனர்.
