ADDED : ஜூன் 06, 2026 11:29 PM
மாலுார்: 'மாஸ்தி, கன்னடத்தின் ஆஸ்தி' என்று பாராட்டப்படும் தமிழரான மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் பிறந்த நாள், நினைவு நாள் ஒரே நாளில் அமைந்ததால், இரண்டையும் ஒன்றாக இணைத்து, மாலுாரில் நேற்று நிகழ்ச்சி நடந்தது.
கன்னட இலக்கிய உலகின் புகழ்பெற்ற எழுத்தாளர் மாஸ்தி வெங்கடேச அய்யங்கார். கோலார் மாவட்டம், மாலுார் அருகே மாஸ்தி என்ற இடத்தில், இவர் 6 ஜூன் 1891ல் பிறந்தார். அதே ஜூன் 6ம் தேதி, தன், 95வது வயதில் 1986ல் காலமானார்.
இவரின் பிறந்த நாளும், நினைவு நாளும் ஒரே நாளாக வருவதால், இரண்டு நாளையும் இணைத்து நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். கன்னட இலக்கிய அறிஞர்கள், 'கன்னட சிறுகதைகளின் தந்தை' என்று இவரை போற்றுகின்றனர். இவர், 120-க்கும் மேற்பட்ட கன்னட நுால்களை எழுதியுள்ளார்.
இவரது நினைவைப் போற்றும் வகையில் நேற்று மாலுாரின் மாஸ்தியில், அவர் வாழ்ந்த வீட்டை நுாலகமாக ஆக்கியுள்ளனர். அந்த நுாலகத்தில் அவரது படத்தை திறந்து வைத்து பூஜைகள் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கன்னட இலக்கிய அமைப்பினர் பலர் பங்கேற்றனர்.
அதுபோல, தங்கவயல் தமிழ் சங்கத்தில் மாஸ்தி அய்யங்கார் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதில் தமிழ் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
