/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆக.,1 முதல் ஆட்டோ கட்டணம் உயர்வு அமல்; ஆட்டோ கட்டணம் உயர்வால் ஓட்டுநர்கள் மகிழ்ச்சி
/
ஆக.,1 முதல் ஆட்டோ கட்டணம் உயர்வு அமல்; ஆட்டோ கட்டணம் உயர்வால் ஓட்டுநர்கள் மகிழ்ச்சி
ஆக.,1 முதல் ஆட்டோ கட்டணம் உயர்வு அமல்; ஆட்டோ கட்டணம் உயர்வால் ஓட்டுநர்கள் மகிழ்ச்சி
ஆக.,1 முதல் ஆட்டோ கட்டணம் உயர்வு அமல்; ஆட்டோ கட்டணம் உயர்வால் ஓட்டுநர்கள் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 16, 2025 08:17 AM
பெங்களூரு : பெங்களூரில் குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் 30 ரூபாயிலிருந்து 36 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதால் ஆட்டோ ஓட்டுநர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த கட்டண உயர்வு, ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட நிலையில், கர்நாடகாவில் கடந்த மாதம் பைக் டாக்சிக்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதனால், ஆட்டோக்கள், பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிகை அதிகரித்தது. சில பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலித்தனர்.
விலை உயர்வு
இது குறித்து புகார்கள் வந்ததால், ஆர்.டி.ஓ., அதிகாரிகள் களத்தில் இறங்கினர். அதிக கட்டணம் வசூலித்த 100க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், ஆட்டோ கட்டணம் மட்டும் உயர்த்தப்படவில்லை. எனவே, குறைந்தபட்ச கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநர்களின் பல மாத கோரிக்கையான குறைந்தபட்ச கட்டணத்தை உயர்த்தி பெங்களூரு கலெக்டர் ஜெகதீஷ் உத்தரவிட்டு உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெங்களூரில் இரண்டு கி.மீ., துாரம் ஆட்டோவில் செல்ல குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் 30 ரூபாயாக இருந்தது. தற்போது 36 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரு கி.மீ., கட்டண தொகை 15 ரூபாயில் இருந்து 18 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய கட்டணம்
இரவு 10:00 மணி முதல் காலை 5:00 மணி வரை, வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை விட 50 சதவீதம் கூடுதலாக வசூலிக்கலாம். ஆட்டோ காத்திருக்கும்போது முதல் ஐந்து நிமிடங்களுக்கு கட்டணம் வசூலிக்ககூடாது; இதையடுத்து, ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம்.
ஆட்டோவில் 20 கிலோ வரை லக்கேஜ்களை வைப்பதற்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது. 20 கிலோவுக்கு அதிகமாக வைக்கும் லக்கேஜ்களுக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம். அதிகபட்சமாக 50 கிலோ வரை லக்கேஜ்களை வைக்க அனுமதிக்க வேண்டும்.
இந்த திருத்தப்பட்ட கட்டண தொகையை ஒவ்வொரு ஆட்டோவிலும் காட்சிப்படுத்த வேண்டும். ஆட்டோவில் உள்ள மீட்டரையும் புதிய கட்டணங்களுக்கு ஏற்றவாறு திருத்தம் செய்ய வேண்டும். இது பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட ஆட்டோக்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த கட்டண உயர்வு, ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கோரிக்கை
ஆட்டோ கட்டண உயர்வை, கர்நாடகா மாநில தனியார் போக்குவரத்து சங்க கூட்டமைப்பின் தலைவர் நடராஜ் சர்மா வரவேற்றுள்ளார். பல ஆட்டோ ஓட்டுநர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கி.மீ.,க்கான கட்டணத்தை 20 ரூபாயாக உயர்த்த வேண்டும் எனவும், சில ஆட்டோ சங்கங்கள், குறைந்தபட்ச விலையை 40 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும் எனவும் கோரி உள்ளனர்.
நடவடிக்கை
பயணியரிடம் புதிய கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். அதற்கு மேல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. மீறி வசூலிப்பவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். பிறகு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆர்.டி.ஓ., அதிகாரிகள்,
பெங்களூரு