சி.என்.ஜி., விலை உயர்வால் ஆட்டோ கட்டணம் அதிகரிப்பு
சி.என்.ஜி., விலை உயர்வால் ஆட்டோ கட்டணம் அதிகரிப்பு
ADDED : மே 24, 2026 12:17 AM
பெங்களூரு: சி.என்.ஜி., காஸ் கிலோவுக்கு, 2 ரூபாய் உயர்த்தப்பட்டதால், ஆட்டோ கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மேற்காசியாவில் நடக்கும் போரால் நாடு முழுதும் எரிபொருள், சிலிண்டர், காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதில், பெங்களூரு கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால், காஸ் நிலையங்களுக்கு முன்பு ஆட்டோக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் உருவானது.
இந்நிலையில், சி.என்.ஜி., காஸ் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கடந்த, 10 நாட்களில் மூன்றாவது முறையாக நேற்று சி.என்.ஜி., 1 கிலோவுக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதன் மூலம், 93 ரூபாய்க்கு விற்பனையான 1 கிலோ சி.என்.ஜி., தற்போது, 95 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இது, ஆட்டோ ஓட்டுநர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஸ் விலை உயர்வால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.
எனவே, ஆட்டோ கட்டணத்தை உயர்த்த ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் முடிவு செய்து உள்ளன.
ஏற்கனவே, ஆட்டோவில் பயணிக்க குறைந்தபட்ச கட்டணம் 36 ரூபாய் என மாநில அரசு நிர்ணயித்தது. இதை பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநர்கள் யாரும் பின்பற்றுவதில்லை. ஆட்டோவில் ஏறி, இறங்கினாலே குறைந்தபட்சம், 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கின்றனர்.
இந்நிலையில், கட்டணம் மேலும் உயர்த்தப்பட்டால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் இன்னும் கடுமையாக பாதிக்கப்படுவர். பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோரும் கடுமையாக பாதிக்கப்படுவர் என சம்பந்தப்பட்டவர்கள் கருதுகின்றனர்.
