/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆயுஷ், அலோபதி சிகிச்சை ஒரே இடத்தில் கிடைக்கும்
/
ஆயுஷ், அலோபதி சிகிச்சை ஒரே இடத்தில் கிடைக்கும்
ADDED : ஏப் 04, 2025 06:59 AM
மைசூரு: ''ஒரே இடத்தில் அலோபதி, ஆயுஷ் சிகிச்சை வசதி செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஒரே இடத்தில், அலோபதி, ஆயுஷ் சிகிச்சை அளிக்க அரசு திட்டம் வகுத்துள்ளது. நோய் வராமல் தடுப்பது ஆயுஷ் சிகிச்சையாகும். தாலுகா மருத்துவமனைகளில், ஆயுஷ் சிகிச்சை அளிக்க அரசு ஆலோசிக்கிறது.
இதற்காக ஒவ்வொரு தாலுகா மருத்துவமனைகளில், இரண்டு அல்லது மூன்று ஆயுஷ் டாக்டர்கள் நியமிக்கப்படுவர். ஐந்து படுக்கை வசதி செய்து பஞ்சகர்மா, மசாஜ் உட்பட மற்ற ஆயுஷ் சிகிச்சை கிடைக்கும்படி செய்வோம். மக்கள் நெருக்கடி மிகுந்த ஆரம்ப சுகாதார மையங்களில், ஒரு மருத்துவ அதிகாரி, இரண்டு ஆயுஷ் டாக்டர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்.
அலோபதி, ஆயுஷ் டாக்டர்கள் இடையே குழப்பங்கள் உள்ளன. ஆயுஷ் டாக்டர்களை நியமிக்க, அலோபதி டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆயுஷ், அலோபதி டாக்டர்கள் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னையை சரி செய்வோம். இரு தரப்பினருடன் பேச்சு நடத்தப்படும். தனியார் கிளினிக் நடத்தும் ஆயுஷ் டாக்டர்களுக்கு, இனி எந்த தொந்தரவும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.

