ADDED : ஜூலை 19, 2025 11:11 PM
சாம்ராஜ்நகர்: சாலையோரத்தில் துணியில் சுற்றி வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை, பொது மக்கள் மீட்டனர்.
சாம்ராஜ்நகரின், சாகடே மற்றும் தம்மடஹள்ளி இடையிலான பாதையில், சாலையோரத்தில் பெண் குழந்தை, வேட்டியில் சுற்றி வைக்கப்பட்டிருந்ததை நேற்று மதியம் பரமேஷ் என்பவர் பார்த்தார்.
பிறந்து 10 முதல் 15 நாட்கள் இருக்கலாம். பரமேஷ் உடனடியாக குழந்தையை, சாகடே ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தார். அங்கு குழந்தைக்கு பால் கொடுத்து, சிகிச்சை அளித்து பராமரிக்கப்படுகிறது.
இதையறிந்த அங்கன்வாடி ஊழியர் நாகமணி, சுகாதார மையத்துக்கு சென்று குழந்தையை, சாம்ராஜ்நகரின் தாய், சேய் மருத்துவனையில் சேர்த்தனர். தற்போது குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து, போலீசாரிடம் தகவல் தெரிவித்து, குழந்தையை வீசிச் சென்றவர்களை கண்டுபிடிக்கும்படி புகார் அளிக்க அங்கன்வாடி ஊழியர் நாகமணி முன் வந்துள்ளார்.