ADDED : மே 29, 2026 12:03 AM
பெங்களூரு: பன்னரகட்டா மிருகக்காட்சி சாலையில், புதிதாக பிறந்த நீர் யானைக்குட் டிக்கு, மறைந்த டாக்டர் சமிக்ஷா ரெட்டியின் பெயரை சூட்டும்படி, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உத்தரவிட்டுள்ளார்.
ஷிவமொக்காவின் தாவரகொப்பா மிருகக்காட்சி சாலையில் பணியாற்றியவர் டாக்டர் சமிக்ஷா ரெட்டி. கடந்த சில மாதங்களுக்கு முன், கர்ப்பிணி நீர் யானைக்கு சிகிச்சை அளிக்க சென்ற போது, நீர் யானை தாக்கியது.
பலத்த காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறப்புக்கு காரணமான நீர் யானையும் கூட, சில நாட்களில் இறந்தது. இந்த சம்பவம் மாநில அளவில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பெங்களூரு ரூரல் மாவட்டம், ஆனேக்கல் தாலுகாவில் உள்ள பன்னரகட்டா உயிரியல் பூங்காவில், 17 வயதான 'தஷ்யா' என்ற கர்ப்பிணி நீர் யானை, நேற்று முன் தினம் இரவு பெண் குட்டியை ஈன்றது.
கடந்த முறை இதே நீர் யானை ஈன்ற குட்டிக்கு தொற்று ஏற்பட்டு இறந்தது. எனவே இப்போது ஈன்ற குட்டிக்கு, எந்த தொற்றும் பரவாமல் இருக்க பூங்கா அதிகாரிகள் கண்காணிக்கின்றனர்.
புதிதாக பிறந்த குட்டிக்கு, நீர் யானை தாக்குதலுக்கு பலியான டாக்டர் சமிக்ஷா ரெட்டியின் பெயரை சூட்டும்படி, பூங்கா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
டாக்டரை கவுரவிக்கும் நோக்கில் அவரது பெயரை சூட்ட அமைச்சர் விரும்புகிறார்.
