/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னடைவு 5,948 நோயாளிகள் காத்திருப்பு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னடைவு
/
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னடைவு 5,948 நோயாளிகள் காத்திருப்பு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னடைவு
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னடைவு 5,948 நோயாளிகள் காத்திருப்பு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னடைவு
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னடைவு 5,948 நோயாளிகள் காத்திருப்பு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னடைவு
ADDED : ஜூன் 02, 2025 11:11 PM
பெங்களூரு: கர்நாடகாவில் உடல் உறுப்புகளுக்கான தேவை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. சுகாதாரத்துறை தகவலின்படி, தற்போது 5,948 பேர் காத்திருக்கின்றனர்.
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய, 70 மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது. இவற்றில் பெங்களூரிலேயே 47 மருத்துவமனைகள் உள்ளன.
தட்சிண கன்னடாவில் ஒன்பது மருத்துவமனைகள், மைசூரில் ஆறு, தார்வாடில் நான்கு, கலபுரகியில் இரண்டு, பெலகாவி, உடுப்பியில் தலா ஒரு மருத்துவமனை, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிவு செய்து கொண்டுள்ளனர்.
பெங்களூரில் அதிக மருத்துவமனைகள் பதிவு செய்து கொண்டுள்ளதால், இந்நகரின் மருத்துவமனைகளுக்கு அறுவை சிகிச்சைக்காக, நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். இவர்களுக்கு தேவையான உறுப்புகள் கிடைக்காததால், அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை.
விழிப்புணர்வு
சுகாதாரத்துறை தகவலின்படி, மாநிலம் முழுதும் தற்போது 5,948 பேர் உடல் உறுப்புகளுக்காக காத்திருக்கின்றனர். பொது மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லாததால், உறுப்பு மாற்று சிகிச்சைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால், அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும்.
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிவு செய்து கொண்ட மருத்துவமனை டாக்டர்கள், மூளை செயலிழந்த நோயாளிகளின் குடும்பத்தினருக்கு, உடல் உறுப்பு தானம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
அவர்களின் சம்மதத்துடன், நோயாளியின் உடல் உறுப்புகளை தானம் பெற்று, தேவையான நோயாளிகளுக்கு பொருத்தி, அறுவை சிகிச்சை செய்கின்றனர். தேவையான அளவில் உடல் உறுப்புகள் கிடைப்பதில்லை.
சுகாதாரத்துறை தெரிவித்த தகவலின்படி, உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருப்போரில், சிறுநீரகம் பழுதடைந்த நோயாளிகளே அதிகம். கல்லீரல், இதயம் மாற்ற அறுவை சிகிச்சைக்காகவும் பலர் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாறி வரும் வாழ்க்கை முறை உட்பட, பல்வேறு காரணங்களால் உறுப்புகள் செயலிழப்பு அதிகரிக்கிறது. மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டம் - 1994, உடல் உறுப்புகள் தானத்தை ஊக்கப்படுத்துகிறது. மூளை செயலிழந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்யலாம்.
ஒப்புதல்
மூளை செயலிழந்தவர்களின் கண்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் உட்பட, பல உறுப்புகள் மற்றவர்களுக்கு பயன்படும். இவர்களின் குடும்பத்தினர் ஒப்புதலுடன், உறுப்புகளை தானம் பெறலாம்.
நடப்பாண்டு மாநிலத்தில் 68 பேர் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 118 சிறுநீரகங்கள் உட்பட, 196 உறுப்புகள் தானம் பெறப்பட்டன. சருமம், இதய வால்வுகள் என, மொத்தம் 145 திசுக்கள் தானம் பெறப்பட்டன.
கடந்த ௫ ஆண்டுகளில், 629 பேர் இதயம், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், சிறுகுடல், கணையம் என, பல உறுப்புகளை தானம் செய்தனர். அரசு மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லுாரிகளில், மூளை செயலிழப்பால் இறந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் பெறுவதற்கான முயற்சிகளை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.