/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிக்கு தடை? முதல்வர் சித்தராமையா விளக்கம்
/
ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிக்கு தடை? முதல்வர் சித்தராமையா விளக்கம்
ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிக்கு தடை? முதல்வர் சித்தராமையா விளக்கம்
ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிக்கு தடை? முதல்வர் சித்தராமையா விளக்கம்
ADDED : அக் 16, 2025 05:17 AM

மைசூரு: “அரசு கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது பற்றி, தலைமை செயலர் அளிக்கும் அறிக்கை அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என, முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் அரசு கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று கர்நாடகாவில் அரசு கட்டடம், பொது இடத்தில் ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டுமென, அமைச்சர் பிரியங்க் கார்கே கோரிக்கை விடுத்தார். இதில் என்ன தவறு உள்ளது?
தமிழகத்தில் என்ன நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை ஆராய்ந்து, அறிக்கை தாக்கல் செய்ய, தலைமை செயலருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
அவர் அளிக்கும் அறிக்கை அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரியங்க் கார்கேயை அச்சுறுத்தும் வேலையை, தீய சக்திகள் செய்துள்ளன. அச்சுறுத்தலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். பிரியங்கிற்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும். பெங்களூரு தவிர மற்ற மாவட்டங்களில் ஜாதிவாரி சர்வே வேகமாக நடக்கிறது. எங்கள் இலக்கில் 90 சதவீதம் எட்டப்பட்டு உள்ளது.
அரசு நிதி ஒதுக்கவில்லை என்று, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., வெங்கடசிவா ரெட்டி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி ஆட்சியில் குமாரசாமி முதல்வராக இருந்தபோது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. நான் யாருக்கும் பாகுபாடு காட்டவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பானு முஷ்டாக் தரிசனம்
பானு முஷ்டாக் தரிசனம் எழுத்தாளர் பானு முஷ்டாக், பல எதிர்ப்புகளை கடந்து, மைசூரு தசரா திருவிழாவை துவக்கி வைத்தார். சாமுண்டீஸ்வரியை தரிசனம் செய்தார். ஹாசனுக்கு நேற்று காலை வருகை தந்த இவர், ஹாசனாம்பாவை தரிசனம் செய்தார்.
தரிசனம் முடிந்த பின், அவர் அளித்த பேட்டி:
ஹாசனின், ஹாசனாம்பா தேவியின் ஆராதனை, மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளது. கோவில் திறந்த ஆறாவது நாளன்று, ஹாசனாம்பாவை தரிசித்தது, மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நாட்களில் நடக்கும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்பது, என் மனதுக்கு அமைதியை தந்துள்ளது.
நான் சிறுமியாக இருந்தபோது, என் தாயின் கை விரலை பிடித்துக் கொண்டு, ஹாசனாம்பாவை தரிசிக்க வந்தது, இன்று என் நினைவுக்கு வந்தது. மீண்டும் தரிசிக்க வந்துள்ளேன். முஸ்லிம்களும் கூட, ஹாசனாம்பாவை தரிசிக்க வருகின்றனர். இது நம் ஊர் திருவிழா. இதில் அனைவரும் மகிழ்ச்சியோடு பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹாசனாம்பா கோவிலில் முதல்வர் வழிபாடு
ஹாசன்: ஹாசனில் உள்ள ஹாசனாம்பா கோவிலில் சித்தராமையா சிறப்பு வழிபாடு நடத்தினார். அதற்கு முன்னதாக, புவனஹள்ளி ஹெலிபேடில் அவர் அளித்த பேட்டி:
தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து உட்பட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும், தேர்தல் நடத்த அரசு தயாராக உள்ளது. படிப்படியாக தேர்தலை நடத்தி, ஜனநாயகத்தை பலப்படுத்துவோம்.
அமைச்சர்களுக்கு நான் கொடுத்த இரவு விருந்துக்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட கூடாதா? நவம்பரில் புரட்சி நடக்கும் என்று பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர். ஒரு புரட்சியும் நடக்காது.
ஒவ்வொரு ஆண்டை போல, இந்த ஆண்டும் ஹாசனாம்பாவை தரிசிக்க வந்துள்ளேன். அம்மனின் ஆசி அனைவருக்கும் கிடைக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
'எக்ஸ்' பக்கத்தில் நேற்று முதல்வர் வெளியிட்ட பதிவு:
ஹாசனாம்பா உற்சவத்தில், எந்த வி.ஐ.பி., கலாசாரத்துக்கும் இடம் இல்லை. சாதாரண மக்களும் ஹாசனாம்பாவை எளிதாக தரிசிக்க வேண்டும் என்ற அரசின் முயற்சிக்கு, ஒத்துழைப்பு அளித்த மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளுக்கு நன்றிகள்.
கடந்தாண்டும், ஹாசனாம்பாவை தரிசிக்க வந்திருந்தேன். இப்போதும் வந்துள்ளேன். மாநிலம் சுபிக்ஷமாக வேண்டும். நல்ல மழை பெய்து, விளைச்சல் பெருக வேண்டும், விவசாயிகள் நிம்மதியாக வாழ வேண்டும் என, பிரார்த்தனை செய்தேன்.
ஹா சனாம்பா உற்சவத்துக்கு, கூடுதல் நிதி வழங்குவது குறித்து, அரசு ஆலோசிக்கும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.