/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாமுண்டீஸ்வரி கோவில் அருகே விற்பனையாளர்களுக்கு தடை?
/
சாமுண்டீஸ்வரி கோவில் அருகே விற்பனையாளர்களுக்கு தடை?
சாமுண்டீஸ்வரி கோவில் அருகே விற்பனையாளர்களுக்கு தடை?
சாமுண்டீஸ்வரி கோவில் அருகே விற்பனையாளர்களுக்கு தடை?
ADDED : மே 04, 2025 12:25 AM
மைசூரு: மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலை சுற்றிலும் 100 மீட்டர் சுற்றளவுக்கு, வியாபாரிகள், விற்பனையாளர்கள் கடைகளுக்கு தடை விதிக்க சாமுண்டீஸ்வரி கோவில் மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டுள்ளது.
மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணியர், எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கோவில் அருகே ஏராளமான கடைகள் இருப்பதால், கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் பக்தர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், குறிப்பிட்ட இடத்தை விடுத்து, சாலை வரை கடைகள் வந்திருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, சாமுண்டீஸ்வரி கோவில் மேம்பாட்டு ஆணையம், கோவிலை சுற்றி, 100 மீட்டர் சுற்றளவுக்கு வியாபாரிகள், விற்பனையார்கள் தங்கள் பொருட்களை விற்க, தடை விதிப்பது குறித்து திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ஆணைய செயலர் ரூபா அளித்த பேட்டி:
கோவில் அருகில் வியாபாரிகளும், விற்பனையாளர்களும் குவிந்து இருப்பதால், பொது மக்கள், வெளிநாட்டினர், வி.வி.ஐ.பி.,க்கள் பாதிக்கப்படுகின்றனர். கோவில் அருகிலேயே வியாபாரிகள் விற்பனை செய்வதாக, பக்தர்கள் பலர் ஆணையத்தில் புகார் செய்து வருகின்றனர். இதை தடுக்க பக்தர்களின் நலனுக்காக, கோவிலை சுற்றி வியாபாரிகள், விற்பனையாளர்கள் குறிப்பிட்ட 100 மீட்டர் சுற்றளவுக்கு அவர்களின் பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்க திட்டமிட்டுள்ளோம்.
இதன் மூலம் கோவிலுக்கு பக்தர்கள் சுலபமாக சென்று வர வசதியாக இருக்கும். ஆணையத்தின் முடிவுக்கு இப்பகுதியினர், வர்த்தகத்தினர், பக்தர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இது தொடர்பாக இம்மாதம் 16ம் தேதி ஹிந்து அறநிலைய துறை செயலருடன் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. விற்பனையாளர்களை, கோவில் அருகில் வராமல் இருப்பது குறித்தும், மக்கள் பிரதிநிதிகளிடமும் ஆலோசனை நடத்திய பின், இறுதி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சாமுண்டி மலைக்கு ஜூலை முதல் அக்டோபர் காலகட்டத்தில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். அந்நேரத்தில் ஏற்படும் சிக்கலை தவிர்க்க, முன்கூட்டியே இத்திட்டத்தை செயல்படுத்த ஆணையம் தீவிரமாக முயற்சித்து வருகிறது.