/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பண்டிப்பூர் பாதுகாப்பு எம்.பி., யதுவீர் நம்பிக்கை
/
பண்டிப்பூர் பாதுகாப்பு எம்.பி., யதுவீர் நம்பிக்கை
ADDED : மே 04, 2025 12:18 AM

மைசூரு: “கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற பண்டிப்பூர் புலிகள் சரணாலய பகுதியில், இரவு நேரத்தில் வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படாது. இந்த விஷயத்தில், மத்திய அரசு தலையிட்டு சரியான முடிவை எடுக்கும்,” என, மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர் தெரிவித்தார்.
இதுகுறித்து, நேற்று மைசூரில் அளித்த பேட்டி:
பண்டிப்பூர் புலிகள் சரணாலயம், கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற இடமாகும். விலங்குகளின் பாதுகாப்பை கருதி, பண்டிப்பூர் வனப்பகுதியில் இரவு நேரம் வாகன போக்குவரத்துக்கு, மாநில அரசு தடை விதித்தது. இதை நீக்கும்படி கேரள அரசு நெருக்கடி கொடுக்கிறது.
ஏற்கனவே மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ், எனக்கு கடிதம் எழுதியுள்ளார். 2025ல் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், இதை பற்றி நான் பேசினேன். பண்டிப்பூர் புலிகள் சரணாலயத்தை கடந்து செல்லும், தேசிய நெடுஞ்சாலையில் இரவு போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க, கர்நாடக காங்கிரஸ் அரசு ஆலோசிக்கிறது.
எந்த காரணத்தை கொண்டும், போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கூடாது. இதில் வனம், சுற்றுச்சூழல் துறை தலையிட வேண்டும்.
இப்பகுதியில் இரவு நேரத்தில் வாகனங்கள் நடமாட்டம் இருந்தால், வன விலங்குகள் பாதிக்கப்படும். இதை கருத்தில் கொண்டு, முடிவு செய்யும்படி வேண்டுகோள் விடுத்தேன்.
என் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சர், பண்டிப்பூர் புலிகள் சரணாயத்தின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறியுள்ளார். இதற்கான நடவடிக்கையும் எடுத்துள்ளார். நான் அவருக்கு நன்றி கூறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.