எஸ்.ஐ.ஆர்., குளறுபடி: பா.ஜ., - ம.ஜ.த., இணைந்து விரைவில் போராட்டம்
எஸ்.ஐ.ஆர்., குளறுபடி: பா.ஜ., - ம.ஜ.த., இணைந்து விரைவில் போராட்டம்
ADDED : ஜூலை 04, 2026 11:24 PM

வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுவதாகவும், எஸ்.ஐ.ஆர்., பணிகள் மசூதிகளில் நடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதனால், வழிபாட்டு தலங்கள், பொது இடங்களில் எஸ்.ஐ.ஆர்., பணிகளை பி.எல்.ஓ.,க்கள் நடத்தக்கூடாது என மாநில தலைமை தேர்தல் கமிஷனர் அன்புகுமார் உத்தரவிட்டார்.
இந்நிலையில், பெங்களூரு நெலமங்களாவில் உள்ள மசூதியிலும், தாவணகெரே தெற்கு சட்டசபை தொகுதியில் உள்ள அங்கன்வாடியிலும் எஸ்.ஐ.ஆர்., பணிகள் நடக்கும் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு ம.ஜ.த., மாநில தலைவரும், மத்திய அமைச்சருமான குமாரசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். கர்நாடகாவில் நடக்கும் எஸ்.ஐ.ஆர்., பணிகளில் காங்கிரஸ் அரசு முறைகேடு செய்வதாக அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இது குறித்து அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ., மேலிட தலைவர்களிடம் விவாதிப்பதற்காக டில்லி செல்ல உள்ளார். அவர்களிடம் ஆலோசனை நடத்திய பின், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளார். இந்த போராட்டத்தை பா.ஜ.,வும், ம.ஜ.த.,வும் இணைந்து நடத்த உள்ளன.
