எஸ்.ஐ.ஆர்., பணிகளில் முறைகேடுகள் நடந்தால் தேர்தல் ஆணையமே பொறுப்பு: பிரியங்க் கார்கே
எஸ்.ஐ.ஆர்., பணிகளில் முறைகேடுகள் நடந்தால் தேர்தல் ஆணையமே பொறுப்பு: பிரியங்க் கார்கே
ADDED : ஜூலை 04, 2026 11:24 PM

பெங்களூரு: ''எஸ்.ஐ.ஆர்., விவகாரத்தில், முறைகேடு நடந்தால் அதை நிவர்த்தி செய்ய வேண்டியது தேர்தல் ஆணையமே தவிர, மாநில அரசு அல்ல,'' என உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.
கர்நாடகாவில் கடந்த சில நாட்களுக்கு முன், எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி துவங்கி, நடந்து வருகிறது. இதில், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எதிர்க்கட்சிகளான பா.ஜ., - ம.ஜ.த., குற்றம்சாட்டி உள்ளன.
குறைபாடு இது தொடர்பாக உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே நேற்று அளித்த பேட்டி:
எஸ்.ஐ.ஆர்., பணியில் முறைகேடுகள் செய்ய முடியாது. தேர்தல் ஆணையத்தில் பார்வையாளர்கள் உள்ளனர். உண்மையில் குறைபாடு இருந்தால், அதை சரி செய்ய வேண்டியது ஆணையம் தானே தவிர, மாநில அரசு அல்ல.
எந்தவொரு குறிப்பிட்ட சமுதாய கட்டடத்திலோ அல்லது அலுவலகத்திலோ எஸ்.ஐ.ஆர்., பணிகளை செய்ய மாநில அரசு கட்டாயப்படுத்த வில்லை.
இருப்பினும் இந்த செயல்முறை குறித்து பொது மக்கள் இடையே அதிருப்தியும், பதற்றமும் நிலவுகிறது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு 12 கேள்விகளை அனுப்பி உள்ளோம். ஆனால் இதுவரை எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனவே, இந்த பதற்றத்துக்கு யார் காரணம்?
அச்சம் தேர்தல் விதிகளை உருவாக்குவது மாநில அரசு அல்ல. பி.எல்.ஏ., எனும் பூத் நிலை அலுவலர்கள் எங்கள் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கும் அதிகாரம், தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது. இந்த செயல்பாடுகளில் முறைகேடு நடந்தால், தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனாலும் சமீப காலங்களில் எஸ்.ஐ.ஆர்., செயல்முறையின் காரணமாக தலித்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடையே மிகுந்த பதற்றம் நிலவி வருகிறது.
பீஹார், மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே மாநில, மத்திய திட்டங்களின் பலன்கள் கிடைக்கும் என்று மாநில அரசுகள் கூறியுள்ளன.
இத்தகைய குழப்பங்களை தெளிவுபடுத்த வேண்டியது தேர்தல் ஆணையம் தான்; மாநில அரசு அல்ல. ஆணையத்திடம் அவகாசம் கேட்டும், அவர்கள் எந்த தகவலையும் அளிக்கவில்லை.
மத்தியில் இருப்பது உங்கள் (பா.ஜ.,) அரசு. நீங்கள் விரும்பியதை செய்யுங்கள்; யாரும் தடுக்கவில்லை. நாங்கள் எஸ்.ஐ.ஆர்.,க்கு எதிரானவர்கள் அல்ல. அது வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.
இவ்வாறு அவர் கூறினார்.
எஸ்.ஐ.ஆர்., ஊழியர்
விபத்தில் படுகாயம்
துமகூரு மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., பணியில் கிராம நிர்வாக அதிகாரி புவனா ஈடுபட்டுள்ளார். நேற்று காலை இப்பணிக்காக தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது டிப்பர் லாரி ஒன்று அவர் மீது மோதியது. படுகாயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் அறிந்த புவனாவின் பெற்றோர், குடும்பத்தினர், கிராம நிர்வாக அதிகாரிகள், மருத்துவமனை முன் கூடி, மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது, 'உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக, புவனா பணிக்கு சென்றார். இதற்கு மாவட்ட நிர்வாகமே காரணம்' என்றனர்.
தகவல் அறிந்த கலெக்டர் சுபா கல்யாண், போராட்டக்காரர்களிடம் பேசி சமாதானப்படுத்தினார். இதனால் மருத்துவமனை முன், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
***
