ADDED : ஜூலை 04, 2026 11:26 PM
பெங்களூரு: நடைபாதைகள், சாலையோரங்களில் சட்டவிரோதமாக பேனர் வைப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க மாநில அரசு முடிவு செய்து உள்ளது.
பெங்களூரில் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, கடந்த மாதம் 30ம் தேதி துவங்கியது. இதில், நடைபாதைகளில் உள்ள சாலையோர வியாபாரிகளின் கடைகள் அதிரடியாக அகற்றப்படுகின்றன.
இந்த நடவடிக்கைக்கு சாலையோர வியாபாரிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால், வேறு இடங்களில் கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்தது.
இந்நிலையில், சாலையோரங்கள் மற்றும் நடைபாதைகளில் எவ்வித முன்அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசு முடிவு செய்து உள்ளது. சட்டவிரோதமாக பேனர் வைப்பவர்களுக்கு 50,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
நடைபாதை ஆக்கிரமிப்புகளை தடுப்பதற்காக புதிய கொள்கை வகுக்கப்பட உள்ளது. இந்த முடிவு விரைவில் அமலாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம், நகரில் வைக்கப்படும் பேனர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். பேனர்களால் ஏற்படும் விபத்துகளும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
