ADDED : ஜூலை 04, 2026 11:27 PM
அமைச்சர் கார் மோதி காயம்
சுகாதாரத்துறை அமைச்சர் காதர், நேற்று மதியம் உத்தரகன்னடா மாவட்டம், அங்கோலாவின், வரதராஜ் ஹோட்டல் வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இவரது மெய்க்காவல் வாகனம், பைக் மீது மோதியதில், சந்தீப் நாயக் என்பவர் பலத்த காயமடைந்தார். இவரை அமைச்சர் காதர், தன் வாகனத்தில் அழைத்து சென்று, மருத்துவமனையில் சேர்த்தார்.
செயின் பறிப்பு
பெங்களூரு ஜெயநகர் முதலாவது ஸ்டேஜ், 10வது 'சி' பிரதான சாலையில் நேற்று காலையில் காயத்ரி, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்மநபர், காயத்ரி கழுத்தில் இருந்த 30 கிராம் எடையுள்ள தங்கச் செயினை பறித்து கொண்டு தப்பியோடினார். அவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
கோவில் காளை திருட்டு
தாவணகெரே சென்னகிரியின் சங்காஹள்ளி கிராமத்தில் உள்ள பசவேஸ்வரா கோவிலில், 'கரிபசவா' என்ற காளை மாடு வளர்க்கப்பட்டது.
நேற்று முன் தினம் இந்த காளையை, மர்ம கும்பல் காரில் ஏற்றி கடத்தி சென்றது. இந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது பக்தர்களுக்கு வருத்தம் அளித்துள்ளது.
இயக்குநர் வீட்டில் திருட்டு
பெங்களூரின் கொடிகேஹள்ளியில் வசிக்கும் லிகித் ராஜ், குறும்படங்களை இயக்கி நடிக்கிறார். இவரது வீட்டுக்கு நடிக்க வாய்ப்பு கேட்டு, அபிஷேக், 24, என்பவர் சமீபத்தில் வந்தார். அப்போது யாரும் கவனிக்காத போது, பூஜை அறையில் இருந்த 15 தங்கச்செயினை திருடி சென்றார்.
இது குறித்து, லிகித் ராஜின் தாய் ரூபா ராஜ், போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசாரும் சம்பவ நாளன்று, வீட்டுக்கு வந்தவர்களை விசாரித்தனர். அப்போது அபிஷேக், நகையை திருடியது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
