ADDED : ஜூலை 04, 2026 11:28 PM

துமகூரு: துமகூரு மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., பணியில் கிராம நிர்வாக அதிகாரி புவனா ஈடுபட்டுள்ளார். நேற்று காலை இப்பணிக்காக தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது டிப்பர் லாரி ஒன்று அவர் மீது மோதியது. படுகாயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தகவல் அறிந்த புவனாவின் பெற்றோர், குடும்பத்தினர், கிராம நிர்வாக அதிகாரிகள், மருத்துவமனை முன் கூடி, மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது, 'உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக, புவனா பணிக்கு சென்றார். இதற்கு மாவட்ட நிர்வாகமே காரணம்' என்றனர்.
தகவல் அறிந்த கலெக்டர் சுபா கல்யாண், போராட்டக்காரர்களிடம் பேசி சமாதானப்படுத்தினார். இதனால் மருத்துவமனை முன், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
