மாணவர் விடுதியின் கீழ் தளத்தில் 'பார்' கண்டுகொள்ளாத அதிகாரிகள் மவுனம்
மாணவர் விடுதியின் கீழ் தளத்தில் 'பார்' கண்டுகொள்ளாத அதிகாரிகள் மவுனம்
ADDED : ஜூலை 11, 2026 04:18 AM

பெங்களூரு: மாணவர்கள் தங்கும் விடுதியின், கீழ்தளத்தில் உணவகத்துடன் கூடிய மது அருந்தும் கூடம் செயல்படுவதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொள்ளாதது, சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பெங்களூரு, கே.ஆர்.புரத்தின் அவலஹள்ளியில், தனியார் கட்டடம் ஒன்றில், மாணவர் விடுதி செயல்படுகிறது. பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த விடுதியில், நுாற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கியுள்ளனர்.
இதே கட்டடத்தின் கீழ் தளத்தில், உணவகத்துடன் கூடிய மது அருந்தும் கூடம் செயல்படுகிறது. இரண்டு ஆண்டுகளாக, விடுதி இதே கட்டடத்தில் இயங்குகிறது. மூன்று மாதங்களுக்கு முன், கட்டடத்தின் கீழ் தளத்தில் உணவகத்துடன் கூடிய மது அருந்தும் கூடம் திறக்கப்பட்டது.
அன்று முதல் மாணவர்கள் பல தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். இரவு, பகல் பாராமல் அந்த மதுபான கூடத்திற்கு மது அருந்த வரும் வாடிக்கையாளர்கள், குடிபோதையில் கூச்சலிட்டு, தகராறு செய்கின்றனர்.
இவர்களால் மாணவர்களின் படிப்புக்கு, இடையூறு ஏற்படுகிறது. படிக்க சரியான சூழ்நிலை இல்லாததால், விடுதியை வேறு கட்டடத்துக்கு மாற்ற வேண்டும் என, மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆனால் விடுதியை மாற்ற, விடுதி வார்டனோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ நடவடிக்கை எடுக்கவில்லை.
மாணவர்கள் தங்கியுள்ள விடுதி கட்டடத்தின் கீழ் தளத்தில், மதுக்கூடம் திறக்க அனுமதி அளித்தது சரியா; மாணவர்கள் குடி பழக்கத்துக்கு ஆளாகும் அபாயம் இல்லையா; இதை அறிந்தும் அதிகாரிகள் மவுனமாக இருப்பது சரியா என, பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மதுக்கூடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். அல்லது விடுதியை வேறு இடத்துக்கு மாற்றி, மாணவர்களின் கல்விக்கு தேவையான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
