ஏ.டி.எம்., வாகனத்தில் ரூ.1.79 கோடி கொள்ளை அடிக்க சதி திட்டம்? சாவியை பறித்தவர்களை தேடும் போலீஸ்
ஏ.டி.எம்., வாகனத்தில் ரூ.1.79 கோடி கொள்ளை அடிக்க சதி திட்டம்? சாவியை பறித்தவர்களை தேடும் போலீஸ்
ADDED : ஜூலை 11, 2026 04:23 AM
பன்னர்கட்டா: பெங்களூரில் ஏ.டி.எம்., வாகனத்தில் இருந்த, 1.79 கோடி ரூபாயை கொள்ளையடிக்க சதி நடந்ததாக அளிக்கப்பட்ட புகார் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
பெங்களூர் நகரின் பன்னர்கட்டாவில் இருந்து ரூரல் பகுதியில் உள்ள ஜிகனிக்கு, 1.79 கோடி ரூபாய் பணத்துடன், ஏ.டி.எம்., வாகனம் நேற்று முன்தினம் இரவு சென்றது.
பன்னர்கட்டா - ஜிகனி முக்கிய சாலையில் சென்ற போது, வாகனத்தை டிரைவர் 'யு - டர்ன்' செய்தார். அப்போது அந்த வழியாக சென்ற பைக் மீது ஏ.டி.எம்., வாகனம் உரசியது.
பைக்கில் பயணம் செய்த இருவர், பைக்கை நிறுத்தி விட்டு கீழே இறங்கினர். ஏ.டி.எம்., வேனை மறித்தனர். டிரைவர், கன்மேன், இரண்டு ஊழியர்கள் என நான்கு பேரிடம் தகராறு செய்தனர்.
அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தியதாலும், பொதுமக்கள் கூடியதாலும், ஏ.டி.எம்., வாகன சாவியை பறித்து விட்டு, பைக்கில் இருவரும் தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த, பன்னர்கட்டா போலீசார், அங்கு சென்று, ஏ.டி.எம்., வாகன டிரைவர் உட்பட நான்கு பேரிடமும் விசாரணை நடத்தி தகவல் பெற்று கொண்டனர். இன்னொரு ஏ.டி.எம்., வாகனத்தை வரவழைத்து, பணத்தை அனுப்பினர்.
வாகனத்தில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க சதி நடந்து இருக்கலாம் என்ற புகாரில், பன்னர்கட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பைக்கில் தப்பிய இருவரையும் தேடி வருகின்றனர்.
பெங்களூரில், கடந்த ஆண்டு நவம்பர் 19ம் தேதி, ஏ.டி.எம்., வாகனத்தை மறித்து, 7.11 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.
