பூச்சிக்கொல்லி தெளித்த காளானை சாப்பிட்ட ஒன்பது பேர் மருத்துவமனையில் அனுமதி
பூச்சிக்கொல்லி தெளித்த காளானை சாப்பிட்ட ஒன்பது பேர் மருத்துவமனையில் அனுமதி
ADDED : ஜூலை 11, 2026 04:24 AM
பெலகாவி: பெலகாவி மாவட்டம், சிக்கோடி தாலுகாவின் உமரணி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜித்திமணி, கோலி குடும்பத்தினர். இவ்விருவரும் கூலி வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து ஜித்திமணி, கோலி இருவரும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, வயலின் ஓரத்தில் வளர்ந்திருந்த காளான்களை எடுத்து வீட்டுக்கு சென்றனர். இரவு காளான் சமைத்து சாப்பிட்ட இரு குடும்பத்தினருக்கும் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. குழந்தைகள் வலியால் துடித்தனர்.
விபரீதத்தை உணர்ந்து இரு குடும்பத்தினரும், இரு கார்களில், சிக்கோடி அரசு மருத்துவமனைக்கு சென்று, விஷயத்தை கூறினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்பது பேரில், கர்ப்பிணி பெண்ணுக்கு மேல் சிகிச்சை அளிக்க, பெலகாவி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தற்போது அனைவரும் சீரான உடல்நிலையில் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து கோலி கூறுகையில், ''வேலை முடித்து வீட்டுக்கு வரும்போது, வயலில் விளைந்திருந்த காளானை சமைத்து சாப்பிட வீட்டுக்கு எடுத்து சென்றோம். ஆனால் காளானில், பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது எங்களுக்கு தெரியாது. இப்போது நாங்கள் ஓரளவு தேறி வருகிறோம்,'' என்றார்.
