ADDED : செப் 17, 2026 11:13 PM
- நமது நிருபர் -:
பெங்களூரு ரேஸ் கோர்ஸ் மைதானத்தை குனிகல்லுக்கு மாற்ற, குதிரை பந்தய கிளப் நிர்வாகிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
பெங்களூரு நகரின் மையப்பகுதியான ரேஸ்கோர்ஸ் சாலையில், 83 ஏக்கரில், பெங்களூரு குதிரை பந்தய மைதானம் உள்ளது. 1923ம் ஆண்டு, பெங்களூரு குதிரை பந்தய கிளப்பிற்கு இந்த நிலம், குத்தகையாக வழங்கப்பட்டது. 2009ல் குத்தகை காலம் முடிந்த நிலையில், இடத்தை விட்டு கொடுப்பதில் அரசு, குதிரை பந்தய கிளப் இடையே பிரச்னை எழுந்தது. நீதிமன்றத்திற்கும் பிரச்னை சென்றது.
கடந்த, 2010 முதல் குத்தகை மாற்றி அமைக்கப்படாததால், அரசுக்கு பெரும் நிதியிழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், துமகூரின் குனிகல்லிற்கு குதிரை பந்தய மைதானத்தை மாற்றுவதற்கு, குதிரை பந்தய கிளப்பிற்கு அரசு உத்தரவிட்டது.
இது தொடர்பாக, குதிரை பந்தய கிளப் நிர்வாகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட உறுப்பினர்கள், நிர்வாகிகள் அனைவரும், குதிரை பந்தய மைதானத்தை, குனிகல்லுக்கு மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்தனர்.
பந்தயங்களை தொ டர்ந்து நடத்துவதற்கும், விளையாட்டை காப்பாற்றுவதற்கும் அரசுடன் இணங்கி போவதை தவிர, வேறு சிறந்த வழியில்லை என்றும், நிர்வாகிகள், உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.
