ADDED : செப் 17, 2026 11:14 PM

- நமது நிருபர் -:
ஊக்கமருந்து பயன்படுத்திய, சித்ரதுர்காவை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை பிரக்ருதி ராவுக்கு போட்டிகளில் பங்கேற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் பிரக்ருதி ராவ், 24. பிரபல தடகள வீராங்கனை. இவர் சென்னையில் பயிற்சியாளர் விக்டர் ஜெபசிங்கிடம் பயிற்சி பெற்று வந்தார். இவர் ஜூன் மாதம், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றார். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கமும், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கமும் பெற்று அசத்தினார்.
இந்த போட்டிகளில் பங்கேற்கும் போது, இவரது சிறுநீரக மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. சோதனையில், அவர் தடை செய்யப்பட்ட ஸ்டீராய்டு மருந்துகளை உபயோகப்படுத்தியது தெரிய வந்துள்ளது. இதனால், அவர் அனைத்து விதமான போட்டிகளிலும் பங்கேற்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தேசிய ஊக்கமருந்து தடுப்பு பிரிவுக்கான சட்டப்பூர்வ நடைமுறை முடிந்த பின், அவர் மூன்று ஆண்டுகள் வரை போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம் என தெரிகிறது.
