ஆங்கில கடல் கால்வாயை கடந்து மங்களூரு புற்றுநோய் நிபுணர் சாதனை
ஆங்கில கடல் கால்வாயை கடந்து மங்களூரு புற்றுநோய் நிபுணர் சாதனை
ADDED : ஆக 13, 2026 11:17 PM

- நமது நிருபர் -:
மூன்று ஆண்டுகளுக்கு முன் நீச்சல் பயின்று, இன்று உலகின் மிகவும் சவாலான கடல் சாகசங்களில் ஒன்றான, ஆங்கில கால்வாயை கடந்து, மங்களூரு புற்றுநோய் நிபுணர் டாக்டர் சாதனை படைத்து உள்ளார்.
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரை சேர்ந்தவர் புற்றுநோய் நிபுணர் டாக்டர் குருபிரசாத் பட். தனது மகனை நீச்சல் பயிற்சிக்கு அனுப்பியிருந்தார். ஆனால், அவரோ, பாதியில் நிறுத்திவிட்டார். ஆனால் குருபிரசாத், அதே நீச்சல் பயிற்சி நிறுவனத்தில் நீச்சல் கற்றார்.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தின் டோவரில் இருந்து, பிரான்ஸ் இடையே உள்ள, இங்கிலீஷ் சேனல் ரிலே நீச்சல் போட்டி நடந்தது.
இதில், இந்திய அணி சார்பில் அர்னவ் ஜலரா, 14, திவ்யா மகாஜன், 16, ரகுநந்தன் கங்கப்பா, தீபிகா ராணி, அங்கிதா கொன்வார், டாக்டர் குருபிரசாத் பட், 43, பங்கேற்றனர். இதுபோன்று வேறு நாடுகளை சேர்ந்த மூன்று அணிகள் பங்கேற்றனர்.
குருபிரசாத் பட் கூறியதாவது:
எங்கள் மருத்துவமனையில் சில நாட்களில், 100 புற்றுநோயாளிகளை பார்க்கிறோம். சில நாட்களில் பத்து மரணங்களை பார்க்க வேண்டியிருக்கிறது. சில சமயங்களில் அதில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படும் போது விரக்தியளிக்கிறது.
அப்போது என் மனதை இலகுவாக்க நீச்சல், ஓட்டப்பந்தயம், சைக்கிள் ஓட்டுவதில் நேரத்தை செலவழிப்பேன். நீந்தும்போதோ அல்லது ஓடும்போதோ எனக்கு வேறு எந்த எண்ணமும் மனதில் இருப்பதில்லை.
மனதை முழுவதுமாக தெளிவுபடுத்துகிறது. மன அமைதியை பெற, ஒவ்வொருவருக்கும் தனி வழி உண்டு. என்னை பொறுத்த வரை, அது உடற்பயிற்சி தான்.
இங்கிலீஷ் சேனல் ரிலே போட்டி என்பது சாதாரணம் அல்ல. கடலின் நடுவில் இருபுறமும் நிலம் தெரியும். ஆனாலும் பிரசான்சுக்கு எப்படி செல்ல வேண்டும் என்பதை அறிவது கடினம். நீரோட்டங்கள் தொடர்ந்து திசை மாறி கொண்டே இருக்கும்.
நாம் வேகத்தை குறைத்தாலும், பிரான்சை விட்டு வெளியேறி, பெல்ஜியம் கடல் பகுதிக்குள் செல்லும் அபாயம் உள்ளது.
நாங்கள் நீந்தியபோது, நான்கு அணிகள் போட்டியிட்டன. அவற்றில் எங்கள் அணி உட்பட இரண்டு அணிகள் மட்டுமே வெற்றி பெற்றது. ஒரு அணி, பிரான்சுக்கு பதிலாக பெல்ஜியத்தை நோக்கி சென்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. மற்றொரு அணியின் தனி நீச்சல் வீரர், அலைகளின் தீவிரம் காரணமாக, போட்டியில் இருந்து பாதியில் விலகி கொண்டார்.
நீந்தும் போது, நீச்சல் உடைகள் அணிய கூடாது. நீச்சல் டிரங்குகள், தொப்பிகள், கண்ணாடிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். உடன் வரும் படகை எந்த காரணத்துக்காகவும் தொடக்கூடாது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும், ஒரு நீச்சல் வீரர் தண்ணீரில் இறங்கி, தொடர் ஓட்டத்தை தொடர்வார்.
உணவு மற்றும் ஆற்றல் பானம் தேவைப்பட்டால், கயிற்றில் கட்டப்பட்ட ஒரு பாட்டில், படகில் இருந்து தண்ணீரில் வீசப்படும். அதை நீந்தி கொண்டே அருந்திவிட்டு, பின் தொடர வேண்டும்.
அலைகள் சாதகமாக இருந்தால், மணிக்கு, 6 - 7 கி.மீ., வேகத்தை அடைய முடியும். எதிர்காற்று பலமாக இருந்தால், 2 கி.மீ., துாரத்தை கடப்பது கூட கடினமாகிவிடும்.
அத்துடன், இப்பகுதியில் ஜெல்லி மீன்கள் அதிக காணப்படும். அவை நம்மை கொட்டினால், கொட்டிய இடத்தில் எரிச்சல், உறுத்தல் ஏற்படும். இருப்பினும், மங்களூரு கடலில் நீந்தி பழக்கம் இருந்தால், உங்களால் அதை சமாளிக்க முடிந்தது.
கர்நாடகாவில் இருந்து பலர் இந்த கால்வாயை கடந்தபோதும், மங்களூரில் இருந்து நான் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
