/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
200க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியிருப்புகள் அகற்றம் பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் அதிரடி
/
200க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியிருப்புகள் அகற்றம் பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் அதிரடி
200க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியிருப்புகள் அகற்றம் பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் அதிரடி
200க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியிருப்புகள் அகற்றம் பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் அதிரடி
ADDED : டிச 21, 2025 05:21 AM

பெங்களூரு: பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில், சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த,200க்கும் மேற்பட்ட வீடுகள், பொக்லைன் மூலம் இடித்து தள்ளப்பட்டன.
பெங்களூரு எலஹங்கா தாலுகா கோகிலு லே - அவுட் பகுதியில், ஜி.பி.ஏ.,வின் கீழ் இயங்கும் பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்துக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட, 200க்கும் மேற்பட்ட வீடுகளில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, 500க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர். இந்த வீடுகளில் பெரும்பாலானவை சிமென்ட் ஓடுகளால் வேயப்பட்டவை. இந்த இடத்தில்,உயிரி மீத்தேன் உற்பத்தி ஆலை கட்ட முடிவு செய்யப்பட்டது.
அதனால், சட்டவிரோதமாக வீடு கட்டி இருப்பவர்களை காலி செய்யும்படி சில மாதங்களுக்கு முன் இரண்டு முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும், அவர்கள் யாரும் அங்கிருந்து போவதாக இல்லை.
பொக்லைன் மூலம் இடிப்பு இதனால், நேற்று கிரேட்டர் பெங்களூரு ஆணைய அதிகாரிகள், பெங்களூரு வடக்கு மாநராட்சி அதிகாரிகள், பெங்., திடக்கழிவு மேலாண்மை அதிகாரிகள் கூட்டாக, சட்டவிரோத குடியிருப்புகளை அகற்ற சென்றனர்.
அவர்களுடன் பாதுகாப்புக்காக போலீஸ், தீயணைப்பு துறை வீரர்கள், வருமான வரித்துறை அதிகாரிகள், 70 மார்ஷல்கள், 200 மாநகராட்சி ஊழியர்களும் சென்றனர். 9 பொக்லைன் இயந்திரங்களும், 9 டிராக்டர்களும் கொண்டு செல்லப்பட்டன. அதிகாரிகள் மைக் மூலம் வீட்டினுள் இருப்பவர்களை, தங்கள் உடமை, ஆவணங்கள், பொருட்களுடன் வெளியேறுமாறு கோரினர்.
இதனால், மக்கள் ஆத்திரம் அடைந்தனர். அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதையெல்லாம், கண்டு கொள்ளாத அதிகாரிகள் வீடுகளை இடிக்கும்படி ஆணையிட்டனர்.
பின், வீடுகள் பொக்லைன் மூலம் இடித்து தள்ளப்பட்டன. இதை பார்த்த குடியிருப்பு வாசிகள் கதறி, கதறி அழுதனர். அதிகாரிகளின் காலை பிடித்து கெஞ்சினர்.
அதே சமயம், சிலர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். நடப்பதை பார்த்து எதுவும் புரியாமல் குழந்தைகள் விழித்தன. மொத்தம், 200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டன.
ரூ.80 கோடி நிலம் மீட்பு வீடுகளை இழந்த குடியிருப்பு வாசிகள் கூறியதாவது:
ஒரே நா ளில் வீடுகள் தரைமட்டமாக்கபட்டன. கையில் குழந்தைகளுடன் எங்கே செல்வது. எங்களுக்கு வேறு இடத்தில் மாற்று வீட்டை மாநில அரசு வழங்க வேண்டும் . இல்லையெனில், போராட்டம் நடத்தப்படும். ஏன் நாங்கள் மட்டும் தான் தவறு செய்தோமா, வேறு யாரும் தவறு செய்வதில்லையா?
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவன தலைவர் கரீகவுடா கூறுகையில், “சட்டவிரோத குடியிருப்புகள் இடிக்கப்பட்டன. 80 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐந்து ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. இந்த பகுதியில் வரும் காலத்தில் உயிரி மீத்தேன் உற்பத்தி ஆலை கட்டப்படும்,” என்றார்.

