பங்கார்பேட்டை மேம்பால பணிகள் ஜூலை 20க்குள் முடிக்க கெடு விதிப்பு
பங்கார்பேட்டை மேம்பால பணிகள் ஜூலை 20க்குள் முடிக்க கெடு விதிப்பு
ADDED : ஜூன் 01, 2026 12:17 AM
பங்கார்பேட்டை: ''பங்கார்பேட்டை- பூதிக்கோட்டை பிரதான சாலையில் உள்ள ரயில்வே மேம்பால கட்டுமான பணிகளை, ஜூலை 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்,'' என, கோலார் ம.ஜ.த., - எம்.பி., மல்லேஸ் பாபு அறிவுறுத்தினார்.
மேம்பாலப்பணிகள் குறித்து கோலார் ம.ஜ.த., எம்.பி., மல்லேஸ் பாபு ஆய்வு செய்தார். தாமதத்திற்கான விபரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதன் பின் அவர் கூறியதாவது:
பங்கார்பேட்டை- பூதிக்கோட்டை பிரதான சாலையில் உள்ள ரயில்வே மேம்பால கட்டுமானப்பணிகள், 2023 டிசம்பரில் தொடங்கப் பட்டன. தென்மேற்கு ரயில்வே மண்டல விதிகளின் படி, 18 மாதங்களுக்குள் முடித்திருக்க வேண்டும்.
ஆனால், பழைய கழிவு நீர் குழாய் இடமாற்றம், ரயில்வே குடியிருப்புகள் அகற்றுவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் தான் தாமதம் என்பதா?
பணிகள் தாமதம் குறித்து தென்மேற்கு ரயில்வே மண்டல மேலாளர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இத்திட்டம், 'பிரதம மந்திரி கதி சக்தி யோஜனா' திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இனிமேல் பணியை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். ஜூலை 20ம் தேதிக்குள் கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும். பாலம் திறக்க மத்திய ரயில்வே அமைச்சர் வருகை தாமதமானால், ரயில்வே உயர் அதிகாரிகள் மூலம் பாலம் திறக்கப்படும்.
பங்கார்பேட்டை தாலுகாவில் மட்டுமின்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் முடங்கி உள்ளன. பணிகள் விரைவாக முடிப்பதற்கு, ரயில்வே மற்றும் வருவாய் துறைகளின் உயர்மட்ட கூட்டம் நடத்தப்பட்டது.
இதற்காக சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்தில் அனைத்து ரயில்வே பணிகளும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுக்குள் முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
