ADDED : மே 24, 2026 02:44 AM

பெலகாவி: பெலகாவி உள்ளிட்ட பல மாநிலங்களில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தினரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரம் காண்பித்து வருகின்றனர். சந்தேகத்தின் பெயரில் 20க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கைது செய்தனர். ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்ததால், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
கர்நாடகாவின் பல நகரங்களிலும், வங்கதேசத்தை சேர்ந்த பலர், சட்ட விரோதமாக குடியிருக்கின்றனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த, புலம்பெயர்ந்த தொழிலாளர் என்ற பெயரில், போலி ஆவணங்களுடன் பல வங்கதேசத்தினர் கர்நாடகாவில் பல நகரங்களில் தங்கியுள்ளனர். இவர்களை நாடு கடத்தும் முயற்சியில், காங்கிரஸ் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
களையெடுப்பு கர்நாடகாவில் கடந்த மூன்றாண்டுகளில் சட்ட விரோதமாக குடியிருந்த, 196 வங்கதேசத்தினர் நாடு கடத்தப்பட்டதாக மாநில உள்துறை அமைச்சகம் பிப்ரவரியில் தெரிவித்தது. தற்போதும், சட் ட விரோத குடியேறிகளை களையெடுக்கும் ஆப்பரேஷன் நடக்கிறது.
இந்நிலையில், பெலகாவி, ஹூப்பள்ளி, தார்வாட்டில் சட்ட விரோதமாக வங்கதேசத்தினர் தங்கியிருப்பதாக பெலகாவி மாவட்ட ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் ரவி கோகித்தர் சமீபத்தில் கூறியிருந்தார்.
இதையடுத்து, பெலகாவி, ஹூப்பள்ளி உள்ளிட்ட பல மாவட்டங்களில், கடந்த இரண்டு நாட்களாக போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், பெலகாவி மாவட்ட பஸ் நிலைய பகுதியில் தங்கியிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், 20க்கும் மேற்பட்டோர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு, மல்மாருதி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
இவர்களிடம் தீவிரமாக விசாரிக்கப்பட்டது. 'நாங்கள் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் கிடையாது. மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் தான். மே ற்கு வங்க சட்டசபை தேர்தலுக்காக சென்றிருந்தோம். தற்போது, தான் அங்கிருந்து திரும்பி வந்தோம். கட்டட வேலைக்காக வந்துள்ளோம்' என்றனர்.
ஆவணங்கள் ஆய்வு இவர்களின் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, மொபைல் எண் மற்றும் பிற ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. இவர்களிடம் இருந்த ஆவணங்கள் மேலோட்டமாக சோதனையிடப்பட்டது. இதில், அனைத்து ஆவணங்களும் உண்மை என தெரிய வந்தது. இருப்பினும், அவர்களுடைய ஆவணங்கள் நகலெடுத்து வைக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களுடைய கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.
இதன் பின், அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் தங்குமிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும், அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களின் உண்மைத்தன்மை ஆழமாக ஆராய்ந்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெலகாவி டி.சி.பி., நாராயண் பரமணி தலைமையில் சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.
