/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பன்னரகட்டா பூங்கா கட்டணம் ஆக., 1 முதல் உயர்வு
/
பன்னரகட்டா பூங்கா கட்டணம் ஆக., 1 முதல் உயர்வு
ADDED : ஜூலை 30, 2025 08:55 AM

பெங்களூரு : ஆக., 1ம் தேதி முதல் பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணம் உயர்த்தப்படுகிறது.
பெங்களூரு நகர மாவட்டம் - பெங்களூரு தெற்கு மாவட்டம் எல்லையில், பன்னரகட்டா அருகில் 1970ல் பன்னரகட்டா உயிரியல் பூங்கா ஏற்படுத்தப்பட்டது. 260.51 கி.மீ., பரப்பளவு உள்ள இப்பூங்காவில் சிங்கம், புலி உட்பட பல்வேறு விலங்குகள் உள்ளன. இவற்றை சபாரி மூலம் சென்று பார்க்கலாம்.
பூங்கா அருகிலேயே குழந்தைகளை கவரும் வகையில் 'பட்டாம்பூச்சி பூங்கா', 'பாம்பு பூங்கா' அமைந்துள்ளன. வார நாட்களை விட, வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் அதிகளவில் மக்கள் இங்கு வருகின்றனர்.
இந்நிலையில், பன்னரகட்டா உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு உணவு, பராமரிப்பு உட்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் விலைகள் அதிகரித்துள்ளன.
எனவே, ஆகஸ்ட் 1ம் தேதி முதல், உயிரியல் பூங்கா நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு 100 ரூபாயில் இருந்து 120 ரூபாயாகவும்; சிறியவர்களுக்கு 50 ரூபாயில் இருந்து 60 ரூபாயாகவும்; மூத்த குடிமக்களுக்கு 60 ரூபாயில் இருந்து 70 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதுபோன்று உயிரியல் பூங்கா மற்றும் பட்டாம்பூச்சி பூங்கா இரண்டையும் பார்க்க, நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு 150 ரூபாயில் இருந்து 170 ரூபாயாகவும்; சிறியவர்களுக்கு 70 ரூபாயில் இருந்து 90 ரூபாயாகவும்; மூத்த குடிமக்களுக்கு 70 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

