ADDED : ஏப் 07, 2026 05:30 AM

தேவனஹள்ளி: ''சமத்துவ சமூகத்தை உருவாக்க பாடுபட்ட பசவண்ணரின் தத்துவங்கள் அனைத்து காலங்களிலும் பொருந்தக்கூடியவை,'' என, வனம், உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே கூறினார்.
பெங்களூரு கிராமப்புற மாவட்ட நிர்வாகம், மாவட்ட பஞ்சாயத்து, பசவேஸ்வர் சிலை அமைப்பு குழு சார்பில், தேவனஹள்ளி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஐந்து அடி உயர பசவேஸ்வர் வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது. 450 கிலோ வெண்கலத்தை பயன்படுத்தி, 80 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள சிலையின் திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவில் அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே பேசியதாவது:
பெண்கள், செல்வம், நிலம் ஆகியவற்றிற்காக, உலகில் பல புரட்சிகள் நடந்துள்ளன. 12ம் நுாற்றாண்டில் மனிதர்களை மனிதர்களாக கருதாத நிலை இருந்தது. மூடநம்பிக்கை, கல்வியறிவு இல்லாமை அதிகமாக இருந்தது. பெண்களுக்கு சமத்துவம் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில், ஜாதி, பாலின பாகுபாடு இல்லாத சமுதாயத்தை உருவாக்க பசவண்ணர் பாடுபட்டார். சமத்துவமான சமூகத்தை உருவாக்க பாடுபட்ட அவரின் கொள்கைகள் அனைத்து காலங்களிலும் பொருந்தக்கூடியவை.
அனைவருக்கும் சமபங்கு, சமவாழ்வு என்ற கொள்கையை வழங்கிய பசவண்ணர், உலகின் முதல், 'அனுபவ மண்டபத்தை' நிறுவினார். பசவ கல்யாணில் கட்டப்பட்டு வரும் நவீன அனுபவ மண்டபத்திற்காக இதுவரை, 280 கோடி ரூபாய் விடுவிக்கப் பட்டுள்ளது. அடுத்த ஆண்டு திறப்பு விழா நடக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் கே.எச்.முனியப்பா, சிக்கபல்லாபூர் பா.ஜ., - எம்.பி., கே.சுதாகர் பேசினர். சுத்துார் ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்திர மகாசுவாமிகள், சித்தகங்கா மடத்தின் ஸ்ரீ சித்தலிங்க மகா சுவாமிகள், பாலபனஹள்ளி மடத்தின் ஸ்ரீ சித்தராஜு சுவாமிகள், ஐந்தாவது நிதி ஆணையத் தலைவர் நாராயணசுவாமி, ஹொஸ்கோட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சரத் பச்சேகவுடா, தொட்டபல்லாபூர் எம்.எல்.ஏ., தீரஜ் முனிராஜு, கலெக்டர் கே.என்.அனுராதா உட்பட பலர் பங்கேற்றனர்.
