மல்லிகார்ஜுன கார்கே முதல்வராக பசவராஜ் ராயரெட்டி திடீர் ஆதரவு
மல்லிகார்ஜுன கார்கே முதல்வராக பசவராஜ் ராயரெட்டி திடீர் ஆதரவு
ADDED : மே 03, 2026 11:33 PM

கொப்பால்: ''கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் நடந்தால், மல்லிகார்ஜுன கார்கே முதல்வராகட்டும்,'' என, முதல்வரின் அரசியல் செயலர் பசவராஜ் ராயரெட்டி கூறினார்.
கொப்பாலில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் முதல்வரை மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், மல்லிகார்ஜுன கார்கேவை முதல்வராக்க வேண்டும். சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து, கீழே இறங்கினால் அந்த பொறுப்பை மல்லிகார்ஜுன கார்கே ஏற்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
கடந்த வாரம் டில்லிக்கு சென்று, கார்கேவை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். மாநிலத்தின் அரசியல் நிலவரம் குறித்து பேசினோம். முதல்வர் மாற்றம் சர்ச்சையால், மாநிலத்தில் தேவையற்ற குழப்பம் ஏற்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அமைச்சரவையை மாற்றிஅமைத்து, 25 அமைச்சர்களை நீக்கிவிட்டு, புதியவர்கள், மூத்தவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தேன்.
சிவகுமார் முதல்வராக கூடாது என, நான் கூறவில்லை. முதல்வராவேன் என, சிவகுமார் எப்போதாவது கூறியுள்ளாரா. நான் யாருடைய ஆதரவாளரும் அல்ல. காங்கிரசின் ஆதரவாளன்.
முதல்வர் சித்தராமையாவின் ஆட்சி முறை நன்றாக உள்ளது. அவர் மீது அன்புள்ளது. எனவே அவருக்கு ஆதரவாக பேசுகிறேன்.
எனக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து, கட்சி மேலிடம் முடிவு செய்ய வேண்டும். ஆனால் அமைச்சர் பதவி வேண்டும் என, நான் கேட்கவில்லை. உண்மையான தாய், குழந்தை அழாவிட்டாலும் பால் கொடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
