/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'சாலையோர கடைகளில் சாப்பிடும் முன் கவனம்'
/
'சாலையோர கடைகளில் சாப்பிடும் முன் கவனம்'
ADDED : ஆக 07, 2025 11:05 PM
பெங்களூரு:'சாலையோரக் கடைகளில் எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடும்போது, மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்' என, மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
பெங்களூரில் கடந்த சில நாட் களாக மழை பெய்கிறது. இதனால், குளிர் வானிலை உள்ளது. இந்த வேளையில், பலரும் சாலையோரங்களில் உள்ள உணவுக் கடைகளில் பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர்.
இதுகுறித்து, கர்நாடகா மாநில உணவு பாதுகாப்புத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரில் உள்ள சாலையோர உணவுக் கடைகளில் ஆய்வு செய்தபோது, 50 கடைகளில் சமையல் எண்ணெயை மாற்றாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது தெரிந்தது. இந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சாலையோர உணவு கடைகளில் மக்கள் சாப்பிடும்போது, கவனமுடன் இருக்க வேண்டும். பழைய எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். பெரும்பாலான உணவுக் கடைகளில், மோசமான நிலையில் உள்ள சமையல் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை எண்ணெயில் செய்யப்படும் உணவுப் பொருட்களை தொடர்ச்சியாக சாப்பிட்டால், உடலில் நரம்பியல் கோளாறு, கொழுப்பு கட்டிகள், மாரடைப்பு ஏற்படலாம்.
சாலையோரக் கடைகளில் எண்ணெய் அதிக முறை பயன்படுத்தப்படுவதால், அவற்றில் அதிக கொழுப்பு உள்ளது; இது நச்சுத்தன்மை வாய்ந்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.