ADDED : மார் 31, 2026 04:23 AM
ஷிவமொக்கா: ஷிவமொக்கா மாவட்டம் விநாயக் நகர் கிராமத்திற்குள் கரடி ஒன்று புகுந்தது. இதை பார்த்த கிராம மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கரடியை பிடிக்க முயற்சித்த போது, அது, ஷிவமொக்கா விமான நிலைய வளாகத்துக்குள் நுழைய முற்பட்டது.
விமான நிலைய வளாகத்தில் இருந்தபடி, வனத்துறையினர், விமான நிலைய ஊழியர்கள் விரட்டினர். புதருக்குள் மறைந்திருந்த கரடி, அங்கிருந்து ஜோதி நகரில் உள்ள அங்கன்வாடி அருகே ஓடியது. அங்கு சக்ரேபைலு யானைகள் முகாம் கால்நடை மருத்துவர் முரளி மனோகர், துப்பாக்கியால் கரடிக்கு மயக்க ஊசி செலுத்தினார். மயங்கிய கரடியை, இரும்பு கூண்டுக்குள் பூட்டி, தாவரகொப்பா புலி மற்றும் சிங்கம் சரணலாயத்துக்கு கொண்டு சென்றனர்.
'சரணலாயத்தில் கரடிக்கு இரண்டு நாட்கள் சிகிச்சை அளித்த பின், உயர் அதிகாரிகளின் உத்தரவுபடி, வேறு இடத்துக்கு மாற்றப்படும்' என வனத்துறையினர் தெரிவித்தனர்.
