ADDED : ஏப் 26, 2026 12:38 AM

வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், மக்கள் தத்தளிக்கின்றனர். ஆரோக்கியத்தை காப்பாற்றி கொள்ள படாதபாடு படுகின்றனர். உடலை குளிர்ச்சியாக்க மண் பானை தண்ணீரை குடிக்கின்றனர். அதனால், மைசூரில் அழகான மண் பானைகள் மக்களை கவரும் வகையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கர்நாடகாவின் மற்ற மாவட்டங்களை போன்று, மைசூரு மாவட்டம் முழுதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கிறது. தினமும், 30 முதல், 35 டிகிரி செல்சியஷ் வெப்பநிலை பதிவாகிறது. வெப்பத்தில் இருந்து தப்பிக்க, வெள்ளரிக்காய், தர்பூசணி, நுங்கு, இளநீர் மற்றும் குளிர் பானங்கள் மக்கள் அருந்துகின்றனர்.
இதற்கி டையே, 'ஏழைகளின் பிரிட்ஜ்' என, அழைக்கப்படும் மண் பானைகளை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
மைசூரில் அழகான பானைகள் விற்பனைக்கு வந்து மக்களை ஈர்க்கின்றன. கலா மந்திர் சாலை, ஹுன்சூர் சாலை, மாவட்ட கலெக்டர் அலுவலக சாலை, டெரேஷியன் கல்லுாரி சாலை உட்பட பல இடங்களில், மண் பானைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.குழாய்கள் வைத்துள்ள பானைகள் அதிகமாக விற்பனையாகின்றன.
பானையி ல் பாசி பிடிக்காது. அசுத்தமடையாது. சுத்தமான நீரை அருந்தலாம். வெயிலுக்கு இதமாக சில்லென்று இருக்கும். ஆரோக்கியத்துக்கும் நல்லது. பிரிட்ஜில் பாட்டில்கள் அல்லது பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி வைத்து பயன்படுத்த வேண்டும். பிரிட்ஜ் இயங்குவதற்கு மின்சாரம் அவசியம். கோடைகாலத்தில் மின்சாரம் கண்ணாமூச்சு விளையாடும். பிரிட்ஜ் செயல்படாது; நீரும் குளிர்ச்சியாக இருக்காது.
ஆனால், மண் பானைக்கு மின்சாரம் தேவையில்லை. குளிர்ந்த நீரை எளிதாக பெறலாம். பானைகள் வாங்க அதிக பணமும் செலவாகாது. 450 முதல் 2,000 ரூபாய் வரையிலான விலையில் தரமான பானைகள் கிடைக்கும். அவற்றின் அளவு மற்றும் வடிவம் அடிப்படையில் தான் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
மைசூரு மட்டுமின்றி, கோலார், பெங்களூரு, துமகூரு உட்பட, அனைத்து நகரங்களிலும், அழகான மண் பானைகள் மக்களை ஈர்க்கின்றன. பானைகள் மீது வண்ண மயமான அலங்கார சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. பானைகளில், ஐந்து முதல் 20 லிட்டர் வரை நீர் நிரப்பலாம்.
ராஜஸ்தானில் பானைகள் கெட்டியாகவும், அலங்காரமாகவும் தயாரிப்பதால், வியாபாரிகள் அங்கிருந்து பானைகள் வாங்கி வந்து மைசூரில் விற்கின்றனர். தொழில்நுட்ப யுகத்திலும், பானைகளுக்கு மவுசு குறையவில்லை.
வியாபாரி கன்னையா லால் கூறியதாவது:
கடந்த மாதம் முதல் மாவட்ட கலெக்டர் அலுவலக சாலையில், நான் பானை வியாபாரம் செய்கிறேன். கோடைகாலம் என்பதால், மக்கள் தினமும் வந்து பானை வாங்குகின்றனர். பானை நீர் அருந்தினால், ஆரோக்கியமும் அதிகரிக்கும். உடல் குளிர்ச்சியாகும்.
இவ்வாறு கூறினார்.
- நமது நிருபர் -
