/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மூட்டை பூச்சி மருந்து நெடி: பட்டதாரி பலி
/
மூட்டை பூச்சி மருந்து நெடி: பட்டதாரி பலி
ADDED : அக் 23, 2025 11:15 PM

பெங்களூரு: 'பேயிங் கெஸ்ட்' மையத்தில் தெளிக்கப்பட்ட மூட்டை பூச்சி மருந்தால், பி.டெக்., பட்டதாரி உயிரிழந்தார்.
ஆந்திராவின் திருப்பதியை சேர்ந்தவர் பவன், 21. பி.டெக்., பட்டதாரியான இவர், வேலை தேடி பெங்களூருக்கு வந்தார். அஸ்வத் நகரில் பி.ஜி.,யில் தங்கினார். ஐ.டி., நிறுவனங்களில் வேலை தேடி வந்தார். தீபாவளி பண்டிகையை கொண்டாட, 16ல் சொந்த ஊருக்குச் சென்றார்.
அந்த அறையில் மூட்டை பூச்சிகள் அதிகம் இருந்ததால், பி.ஜி., உரிமையாளர், 'மாஸ்டர் கீ'யை பயன்படுத்தி, அறையை திறந்து, மூட்டை பூச்சி மருந்து அடித்திருந்தார். இந்த தகவலை பவனிடம் கூறவில்லை.
ஊருக்கு சென்றிருந்த பவன், 19ம் தேதி, பி.ஜி.,க்கு திரும்பினார். இரவு அதே அறையில் உறங்கினார். மறுநாள் பார்த்தபோது, மயக்கத்தில் இருந்தார். பி.ஜி., ஊழியர்களும், இங்கு தங்கியவர்களும் பவனை, மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு, மூட்டை பூச்சி மருந்து நெடியை சுவாசித்ததே காரணம் என்ற புகார் எழுந்தது.
இதுகுறித்து, ஹெச்.ஏ.எல்., போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் பவனின் உடலை, பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
'எங்கள் மகனின் இறப்புக்கு, பி.ஜி., உரிமையாளரின் அலட்சியமே காரணம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசாரிடம் அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

