/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நடப்பாண்டின் முதல் 6 மாதத்தில் பீர் விற்பனை சரிவு! ...: கடந்த ஆண்டை விட 18 சதவீதம் குறைவு
/
நடப்பாண்டின் முதல் 6 மாதத்தில் பீர் விற்பனை சரிவு! ...: கடந்த ஆண்டை விட 18 சதவீதம் குறைவு
நடப்பாண்டின் முதல் 6 மாதத்தில் பீர் விற்பனை சரிவு! ...: கடந்த ஆண்டை விட 18 சதவீதம் குறைவு
நடப்பாண்டின் முதல் 6 மாதத்தில் பீர் விற்பனை சரிவு! ...: கடந்த ஆண்டை விட 18 சதவீதம் குறைவு
ADDED : ஜூலை 17, 2025 11:01 PM

பெங்களூரு: கர்நாடகாவில் பீர் விலை உயர்வு, முன்கூட்டியே பெய்த பருவமழை போன்றவற்றால் நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் பீர் விற்பனை சரிந்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில், 18 சதவீதம் குறைவு என கலால் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் நான்கு முறை மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. இதனால், மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விலை உயர்வால் விற்பனை குறைவதாக மதுபான விற்பனையாளர்கள் குற்றம் சாட்டினர்.
கடைசியாக, கடந்த மே 15ம் தேதி, பீர் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அயல்நாட்டு மதுபானங்கள் மீதான கலால் வரியை 5 சதவீதம் உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனால், கலால் வரி 195 சதவீதத்தில் இருந்து, 200 சதவீதமாக உயர்ந்தது. இதற்கு ஏற்ப, பீர் விலை பாட்டிலுக்கு குறைந்தபட்சம் 10 ரூபாய் முதல் உயர்த்தப்பட்டது.
* விற்பனை குறைவு
இந்த வரி உயர்வுகளால் நடப்பாண்டில் கர்நாடகாவில் பீர் விற்பனை கடுமையாக குறைந்து உள்ளது.
இது குறித்து கலால் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கர்நாடகாவின் நடப்பாண்டில் முதல் ஆறு மாதங்களில் பீர் விற்பனை மந்தமாக இருந்தது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 209.9 லட்சம் பீர் பெட்டிகள் விற்கப்பட்டு உள்ளன. ஒரு பெட்டியில் 12 பீர் பாட்டில்கள் இருக்கும்.
கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 257 லட்சம் பீர் பெட்டிகள் விற்கப்பட்டன. இந்த தரவுகளை வைத்து பார்க்கும் போது, பீர் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18 சதவீதம் குறைந்து உள்ளது.
அதே சமயம், கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பீர் விற்பனை மூலம் 18,360 கோடி ரூபாய் வருவாய் வந்தது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பீர் விற்பனை 18,470 கோடி ரூபாயாக உள்ளது. இதை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு, 110 கோடி ரூபாய் வருவமானம் அதிகமாகவே உள்ளது. பீர் மீதான விலை ஏற்றத்தால், விற்பனை குறைந்து இருந்தாலும், வருமானம் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.
* மழை காரணம்
விலை ஏற்றம் ஒரு காரணமாக இருந்தாலும், பொதுவாக ஏப்ரல் முதல் ஜூலை மாதங்களில் வெப்பம் காரணமாக பீர் விற்பனை நன்றாக நடக்கும். இந்த ஆண்டு பருவ மழை முன்கூட்டியே துவங்கியதால், பீர் விற்பனை குறைந்து விட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மதுபான கடை உரிமையாளர்கள் கூறியதாவது:
பீர் விலை பல முறை உயர்த்தப்பட்டதால், விற்பனை குறைந்து உள்ளது. விளம்பரங்கள் செய்தாலும் பீர் விற்பனையில் முன்னேற்றம் இல்லை. இதனால், எங்கள் வருமானம் பாதிக்கப்பட்டு உள்ளது.
வருமானத்தை அதிகரிக்க மது பானத்துடன் சாப்பிடும் உணவு பண்டங்களின் விலையை உயர்த்த முடியாது. ஏனெனில், வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் அபாயம் உள்ளது.
சராசரியாக, பத்து பீர் பெட்டிகள் விற்கும் கடைகளில், விற்பனை 7 முதல் 8 அட்டை பெட்டிகளாக குறைந்து உள்ளது. வணிகம் நஷ்டத்தில் செல்கிறது. விலை உயர்வால் அரசுக்குதான் அதிக வருவாய் கிடைக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.