/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெலகாவி மேயர் மற்றும் கவுன்சிலர் தகுதி நீக்கம்! மாநகராட்சி கடைகளில் முறைகேடு அம்பலம்
/
பெலகாவி மேயர் மற்றும் கவுன்சிலர் தகுதி நீக்கம்! மாநகராட்சி கடைகளில் முறைகேடு அம்பலம்
பெலகாவி மேயர் மற்றும் கவுன்சிலர் தகுதி நீக்கம்! மாநகராட்சி கடைகளில் முறைகேடு அம்பலம்
பெலகாவி மேயர் மற்றும் கவுன்சிலர் தகுதி நீக்கம்! மாநகராட்சி கடைகளில் முறைகேடு அம்பலம்
ADDED : ஜூன் 29, 2025 03:22 AM

பெலகாவி: அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, பொதுப்பணித் துறை கட்டிய கட்டடத்தில் மனைவியர் பெயரில் ஹோட்டல் நடத்திய, பெலகாவி மாநகராட்சி பா.ஜ., மேயர், கவுன்சிலர் ஆகியோரை தகுதிநீக்கம் செய்து, நகர மேம்பாட்டுத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
பெலகாவி மாநகராட்சி, பா.ஜ., வசம் உள்ளது. பா.ஜ., கவுன்சிலர்களாக 41வது வார்டின் மங்கேஷ் பவார், 23வது வார்டின் ஜெயந்த் ஜாதவ் இருந்தனர்.
இவர்கள் இருவரும் பெலகாவி நகரின் தினிசுகட்டே பகுதியில், பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான கட்டடத்தில், தங்கள் மனைவியர் பெயரில் கடைகளை வாடகைக்கு பெற்று, ஹோட்டல் நடத்துவதாகவும், இது விதிமீறல் என்றும், பெலகாவி மண்டல ஆணையர் சஞ்சய் ஷெட்டண்ணவரிடம், சமூக ஆர்வலர் சுஜித் முலகுந்த், பிப்ரவரி 5ல் புகார் செய்தார்.
இதுபற்றி விசாரித்த மண்டல ஆணையர், மேற்கண்ட இருவரின் கவுன்சிலர் பதவியையும், பிப்ரவரி 10ம் தேதி ரத்து செய்தார்.
* மேல்முறையீடு
இந்த உத்தரவை எதிர்த்து பிப்ரவரி 12ம் தேதி, நகர மேம்பாட்டுத் துறை செயலர் தீபா சோழனிடம், இருவரும் மேல்முறையீடு செய்தனர். இதுதொடர்பாக மார்ச் 11, மே 7, ஜூன் 5, ஜூன் 17 ஆகிய நாட்களில் இரு தரப்பினரையும் அழைத்து, தீபா சோழன் விசாரணை நடத்தினார்.
இதற்கிடையில் கவுன்சிலர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து, உயர் நீதிமன்ற தார்வாட் கிளையில் மங்கேஷ் பவார், ஜெயந்த் ஜாதவ் ஆகிய இருவரும் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நகர மேம்பாட்டுத் துறை செயலர் இறுதி முடிவு எடுக்கும் வரை, கவுன்சிலர் பதவியில் தொடர அனுமதி கொடுத்தது.
இதற்கிடையில் மார்ச் 15ம் தேதி நடந்த, மேயர் தேர்தலில் போட்டியிட்ட மங்கேஷ் பவார் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், நகர மேம்பாட்டுத் துறை நடத்திய விசாரணையில் மங்கேஷ் பவார், ஜெயந்த் ஜாதவ் ஆகிய இருவரும், தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது தெரிய வந்தது. இதனால் இருவரையும் தகுதி நீக்கம் செய்த மண்டல கமிஷனர் உத்தரவு செல்லும் என, நகர மேம்பாட்டுத் துறை செயலர் தீபா சோழன் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து மங்கேஷின் மேயர் பதவியும், ஜெயந்த்தின் கவுன்சிலர் பதவியும் பறிபோய் உள்ளது.
* சட்டமீறல்
நகர மேம்பாட்டுத் துறை முதன்மை செயலர் தீபா சோழன் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:
மங்கேஷ் பவாரும், ஜெயந்த் ஜாதவும், கவுன்சிலர் பதவிக்கு வருவதற்கு முன்பு, தங்கள் மனைவி பெயரில், பெலகாவி மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை, வாடகைக்கு பெற்றிருந்தனர். இருவரும் பெலகாவி மாநகராட்சி கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட பின், விதிகளின்படி கடைகளை காலி செய்திருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் கடைகளை விட்டுத்தரவில்லை. இவர்கள் மீது உயர்நீதிமன்ற உத்தரவுபடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. கர்நாடக முனிசிபல் சட்டத்தை இவர்கள் மீறியுள்ளனர். எனவே இவர்களின் கவுன்சிலர் பதவி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மலிவான அரசியல்!
அரசியல் அழுத்தத்தால் மங்கேஷ், ஜெயந்த்தை நகர மேம்பாட்டுத் துறை செயலர் தீபா சோழன் தகுதி நீக்கம் செய்துள்ளார். நாங்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். உச்ச நீதிமன்றம் வரை சென்றும் போராட்டம் நடத்த தயாராக உள்ளோம். ஏழை குடும்பத்தில் இருந்து வந்த மங்கேஷ், மேயராக இருப்பதை காங்கிரஸ் அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மலிவான அரசியல் செய்கின்றனர்.
அபய் பாட்டீல்,
பா.ஜ., - எம்.எல்.ஏ.,
பெலகாவி தெற்கு