UPDATED : மார் 12, 2026 06:04 AM
ADDED : மார் 12, 2026 05:47 AM

பெங்களூரு: வர்த்தக காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால், பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், விடுதிகள் விறகு அடுப்புக்கு மாறி வருகின்றன.
மேற்காசியாவில் ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானும், பதில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் உலகம் முழுதும் பெட்ரோலிய பொருட்களின் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
ஈரானில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நம் நாட்டில் வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் சிலிண்டர் விலை சமீபத்தில் 60 ரூபாயும்; வர்த்தக சிலிண்டர் விலை 115 ரூபாய் உயர்த்தப்பட்டது.
பெங்களூரு, சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் வணிக ரீதியிலான சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. பெங்களூரில் நேற்று முன்தினமே காஸ் சிலிண்டர்கள் காலியானதால், நுாற்றுக்கணக்கான சிறிய ஹோட்டல்கள் மூடப்பட்டன. நேற்றும் சில ஹோட்டல்கள் மூடப்பட்டன.
ஆனால், சில ஹோட்டல்கள், தொழிலாளர்கள், வாடிக்கையாளர்கள் நலனுக்காக, விறகு அடுப்புகளை பயன்படுத்த துவங்கி உள்ளன. இதற்காக ஒவ்வொரு உரிமையாளரும், 10 முதல் 15 குவிண்டால் விறகுகளை வாங்கி வருகின்றனர்.
ஹோட்டலின் பின்புறம் அல்லது தற்போது செயல்பட்டு வரும் சமையல் அறையிலோ பெரிய விறகு அடுப்புகள் கட்டி உள்ளனர். காலை, மதிய உணவு அதிலேயே தயாரிக்கப்படுகின்றன.
விறகு அடுப்பில் அனைத்து வகையான உணவுகளையும் தயாரிப்பது சவாலான பணி. எனவே, ஹோட்டல் மெனுவில், உணவுகளை குறைத்து உள்ளனர். குறிப்பாக, காஸ் அதிகம் தேவைப்படும் சீன உணவுகளான நுாடுல்ஸ், பிரைடு ரைஸ், சூப்கள், தோசை, பூரிகள் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர்.
இட்லி, புலாவ், சாதம், சாம்பார் போன்ற விறகு அடுப்பில் எளிதாக தயாரிக்க கூடிய பொருட்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
ஹோட்டல் உரிமையாளர்கள் கூறுகையில், 'காஸ் இல்லாவிட்டால் ஹோட்டலை மூட வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனாலும், தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, விறகு அடுப்பை நிறுவி உள்ளோம். இது உணவு தயாரிக்க அதிக நேரம் எடுக்கும். அதிகளவில் புகை வரும் சூழல் உள்ளது.
'இருப்பினும் வருவாயை ஈட்ட, இம்முடிவு அவசியமாகி உள்ளது. விறகு அடுப்பில் செய்யும் உணவில் ருசி இருப்பதால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
அதேவேளையில், மெனுவை குறைத்திருப்பதற்கு அதிருப்தி தெரிவிக்கின்றனர். எங்களுக்கும் இது கவலை அளிக்கிறது. ஆனாலும், காஸ் சிலிண்டர் வரும் வரை இந்த நிலை தொடரும். இதனால் எங்களுக்கு 50 சதவீதம் வருவாய் பாதிக்கும்' என்றனர். இதுபோன்று பி.ஜி., எனும் தங்கும் விடுதிகளிலும் விறகுகளில் சமையல் செய்யும் பணியை துவக்கி உள்ளனர்.
இதற்காக, சரக்கு ஆட்டோக்களில் விறகுகளை வாங்கி, தங்கள் விடுதி வளாகத்திற்குள்ளே பெரிய அடுப்பில் காலை, மாலை உணவுகளை தயாரிக்க துவங்கி உள்ளனர்.
தங்கும் விடுதி உரிமையாளர்கள் கூறியதாவது:
சிலிண்டர்கள் நிறுத்தப்பட்டதால், விடுதிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இங்கு தங்கி படிக்கும், வேலைக்கு செல்வோர், எங்களை நம்பி உள்ளனர். இப்போது அவர்களுக்கு சிற்றுண்டி, உணவை சரியான நேரத்தில் வழங்க முடியவில்லை.
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சிலிண்டர் தேவைப்படுகிறது. போன் செய்து ஏஜன்சிக்கு கூறினாலும், தருவதில்லை. எனவே, விறகு அடுப்புக்கு மாறி உள்ளோம்.
இதில், தோசை, இட்லி, பூரியை நிறுத்தி விட்டு, எளிய உணவுகளை வழங்க முடிவு செய்துள்ளோம். இந்நிலை தொடர்ந்தால், பி.ஜி.,யை முழுதுமாக மூட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இவர்களை போன்று காஸ் ஆட்டோ டிரைவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். காஸ் பங்க்குகளில் காஸ் இருப்பு இல்லாததால், சவாரிக்கு செல்ல முடியாமல், வருமானம் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
