ADDED : பிப் 05, 2026 06:38 AM
பெங்களூரு: மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணத்தை 5 சதவீதம் உயர்த்துவதற்கு அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதற்கு மாநில அரசு அனுமதி அளித்தவுடன், புதிய கட்டணம் அமலுக்கு வரும் என தெரியவந்துள்ளது.
பெங்களூரு மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் 71 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால், நாட்டிலேயே அதிக டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் மெட்ரோவாக பெங்களூரு மெட்ரோ மாறியது.
இதற்கு பயணியர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், காலப்போக்கில் புதிய விலைக்கு பழகி கொண்டனர்.
மேலும், ஆண்டிற்கு ஒரு முறை பிப்ரவரியில் மெட்ரோ ரயில் கட்டணத்தில் திருத்தம் செய்யலாம்; கட்டண உயர்வு அதிகபட்சம் 5 சதவீதம் இருக்க வேண்டும் என்று, மெட்ரோ கட்டண நிர்ணய குழு பரிந்துரை செய்தது. இது, தற்போது அமலில் உள்ளது.
இதற்கு பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா எதிர்ப்பு தெரிவித்தார். ஆண்டுதோறும் கட்டண உயர்வு கூடாது எனவும், மெட்ரோ கட்டண நிர்ணய குழுவை மறுசீரமைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இருப்பினும், இம்மாத இறுதிக்குள் மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணத்தை 5 சதவீதம் உயர்த்த மெட்ரோ அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
இது தொடர்பாக மாநில அரசிடம் பரிசீலனை செய்து உள்ளனர். இதற்கு, மாநில அரசு ஒப்புதல் அளித்தவுடன் மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படும்.
இதனால், டிக்கெட் விலையில் குறைந்தபட்சம் ஒரு ரூபாய் முதல் அதிகபட்சம் 4 ரூபாய் வரை கட்டணம் உயரும். இது, பயணியருக்கு புதிய தலைவலியாக மாறும்.
