நவ., 1ல் பெங்களூரு - மும்பை இடையே படுக்கை வசதி ரயில் துவக்கம்
நவ., 1ல் பெங்களூரு - மும்பை இடையே படுக்கை வசதி ரயில் துவக்கம்
UPDATED : அக் 27, 2026 03:39 AM
ADDED : அக் 26, 2026 10:54 PM

பெங்களூரு: தென்மாநிலங்களில் முதன் முறையாக, படுக்கை வசதி கொண்ட, 'வந்தே பாரத்' ரயில் சேவை பெங்களூரு - மும்பை இடையில் வரும் 1ம் தேதி துவங்குகிறது. 1,095 கி.மீ., துாரத்தை இந்த ரயில் 16 மணி நேரத்தில் கடக்கும்.
'கர்நாடக தலைநகர் பெங்களூரையும், மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையையும் இணைக்கும் வகையில், படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் இயக்கப்படும்' என, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கடந்த பிப்ரவரியில் அறிவித்தார்.
அறிவிப்பு வெளியாகி எட்டு மாதங்கள் ஆகியும், ரயில் இயக்குவது தொடர்பான எந்த அறிகுறியும் தென்படாமல் இருந்தது.
16 பெட்டிகள்
இந்நிலையில் ரயில் இயக்குவது தொடர்பாக, கடந்த 1ம் தேதி சில அறிவிப்புகள் வெளியாகின. ரயிலுக்கு வண்டி எண்களாக 27651/ 27652 கொடுக்கப்பட்டுள்ளன.
அனந்த்பூர், குண்டக்கல், ராய்ச்சூர், கலபுரகி, சோலாபூர், புனே, கல்யாண் ஆகிய நிலையங்களில், ரயில் நின்று செல்லும் என்றும், வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் ரயில் சேவை துவங்குவதற்கான, அதிகாரபூர்வ தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், 'நவம்பர் 1ம் தேதி பெங்களூரு - மும்பை வந்தே பாரத் ரயில் இயங்கும்' என, கர்நாடகாவை சேர்ந்த மத்திய ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா சில தினங்களுக்கு முன், 'எக்ஸ்' பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், பெங்களூரு - மும்பை இடையே இயங்க உள்ள படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில், பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது.
மொத்தம் 16 பெட்டிகள் கொண்ட ரயிலை யார்டு பகுதியில் நிறுத்தி, ரயில்வே ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.
மத்திய அமைச்சர்
வரும் 1ம் தேதி எஸ்.எம்.வி.டி., ரயில் நிலையத்தில், மத்திய ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, மத்திய தொழிலாளர் நல இணையமைச்சர் ஷோபா உள்ளிட்டோர் ரயில் சேவையை துவக்கி வைக்கின்றனர்.
முதல் நாள் பயணத்தில் பள்ளி மாணவர்கள், ரயில்வே ஊழியர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். 2ம் தேதியில் இருந்து வணிக ரீதியிலான பயணம் துவங்குகிறது.
பெங்களூரு - மும்பை இடையிலான 1,095 கி.மீ., துாரத்தை, 16 மணி நேரத்தில் வந்தே பாரத் ரயில் கடக்கும். மற்ற ரயில்களை விட இது 8 மணி நேரம் குறைவு.
