/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரு 'பப்' மேலாளரை துப்பாக்கியால் மிரட்டி கொள்ளை
/
பெங்களூரு 'பப்' மேலாளரை துப்பாக்கியால் மிரட்டி கொள்ளை
பெங்களூரு 'பப்' மேலாளரை துப்பாக்கியால் மிரட்டி கொள்ளை
பெங்களூரு 'பப்' மேலாளரை துப்பாக்கியால் மிரட்டி கொள்ளை
ADDED : மே 13, 2025 12:41 AM

மல்லேஸ்வரம் : துப்பாக்கி முனையில் 'பப்' மேலாளரை மிரட்டி 50,000 ரூபாயை கொள்ளை அடித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு, மல்லேஸ்வரம் மில்க் காலனியில் உள்ளது ஜியோமெட்ரி பப். அப்பகுதியில் உள்ள மிகவும் பிரபலமான பப்களில் ஒன்றாகும். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, பப்பின் பின்வாசல் வழியாக, முகமூடி அணிந்த நபர் ஒருவர், கையில் துப்பாக்கியுடன் வந்துள்ளார்.
இதை பார்த்த பப் ஊழியர்கள் பயத்தில் அலறி அடித்து ஓடினர். ஆனால், அந்நபரோ எதை பற்றியும் கவலைப்படாமல், மூன்றாவது மாடியில் உள்ள பப்பின் மேலாளர் அறைக்குச் சென்றுள்ளார்.
மேலாளரிடம் துப்பாக்கியை காண்பித்து மிரட்டி, டிராயரில் இருந்த 50,000 ரூபாயை கொள்ளை அடித்துவிட்டு, கண்காணிப்பு கேமராக்களையும் சேதப்படுத்தி விட்டுச் சென்றுள்ளார்.
அந்நபர் அங்கிருந்து சென்றதும், பப்பின் மேலாளர் உடனடியாக சுப்பிரமணியா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய போலீசார், தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அக்கம் பக்கத்தில் உள்ள இடங்களில் சோதனையிட்டனர். ஆனால், அந்நபரை பிடிக்க முடியவில்லை.
பின், நேற்று காலை பெங்களூரு வடக்கு பிரிவு டி.சி.பி., சைதுல்லா அதாவத் சென்று சோதனையிட்டார். அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
பெங்களூரு நகரின் மையப்பகுதியில் உள்ள பப்பில், துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை சம்பவம், அப்பகுதியில் வசிப்போரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கூடுதல் போலீஸ் கமிஷனர் விகாஸ் குமார் நேற்று அளித்த பேட்டி:
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தேடும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. முகமூடி, கருப்பு உடை, கையுறையுடன் வந்து கொள்ளை அடித்துள்ளார். அந்நபர் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியதால், அவரை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
கொள்ளை அடிக்கப்பட்ட இடம், சுத்தம் செய்யப்பட்டுள்ளதால், ஆதாரங்கள் சேகரிப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. 50,000 ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக புகார் செய்யப்பட்டு உள்ளது. பல கோணங்களில் விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.