/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோடை மழையால் தத்தளித்த பெங்களூரு
/
கோடை மழையால் தத்தளித்த பெங்களூரு
ADDED : ஏப் 04, 2025 06:43 AM

பெங்களூரு: பெங்களூரு நகரில் நேற்று பெய்த திடீர் கனமழையால் பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மரம் சாய்ந்து விழுந்ததில், இரண்டு கார்கள் சேதம் அடைந்தன.
கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக, வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. குறிப்பாக, வடமாவட்டமான கலபுரகியில் தினமும் அதிகபட்சமாக 40 டிகிரி செல்ஷியஸ் வெயில் சுட்டெரித்து வருகிறது. பெங்களூரிலும், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
குளிர்ந்த காற்று
இந்நிலையில், நேற்று அதிகாலை 5:00 மணி முதல் பெங்களூரு நகரின் மெஜஸ்டிக், சாந்திநகர், சிவாஜிநகர், மல்லேஸ்வரம், பீன்யா, மஹாதேவபுரா, விதான் சவுதா, லால்பாக், ரிச்மென்ட் டவுன், ஒயிட்பீல்டு, கே.ஆர்.புரம், பி.டி.எம்., லே - அவுட், இந்திராநகர், ராஜாஜிநகர், வசந்த்நகர் உட்பட நகர் முழுதும் மழை பெய்ய ஆரம்பித்தது.
ஆரம்பத்தில் துாறல் போட்ட மழை நேரம் செல்ல, செல்ல வெளுத்து வாங்கியது. மதியத்திற்கு மேல் மழை சற்று ஓய்ந்தது; குளிர்ந்த காற்று வீசியது. ஆனால் திடீரென 1:00 மணிக்கு மீண்டும் கனமழை பெய்தது.
இந்த மழையால் மஹாதேவபுரா, ஒயிட்பீல்டு பகுதிகளில் சாலைகளில் மழைநீர், வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், சாலை எங்கு உள்ளது, பள்ளம் எங்கு உள்ளது என்று தெரியாமல் சிரமப்பட்டனர்.
மஹாதேவபுரா பானத்துாரில் ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால், அந்த வழியாக காடுபீசனஹள்ளி நோக்கி சென்ற வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
பழைய விமான நிலைய சாலையின், தொம்மலுார் பகுதியிலும் சாலையில் ஒன்றரை அடிக்கு மேல் மழைநீர் தேங்கி நின்றது.
வெப்ப அலை
ராஜாஜி நகரில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், இரண்டு கார்கள் சேதம் அடைந்தன. இந்திராநகரில் ஒரு மரம் சாய்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. ரிச்மென்ட் டவுன் உட்பட நகரின் பல இடங்கள் மழையால் தத்தளித்தன. பெங்களூரு மட்டுமின்றி சித்ரதுர்கா, ராம்நகர் உள்ளிட்ட சில பகுதிகளிலும் நேற்று மழை பெய்தது.
'வங்க கடல் பகுதியான தமிழகத்தின் கன்னியாகுமரி பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்து உள்ளது. பெங்களூரில் இன்று மாலை நேரத்தில் மிதமான மழை பெய்யும்.
ஷிவமொக்கா, ஹாசன், குடகு, மைசூரு, சாம்ராஜ்நகர், தட்சிண கன்னடா, உடுப்பியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது' என்று, கர்நாடக வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
180 இடங்கள்
இதற்கிடையில், பெங்களூரில் மழையால் எந்த பிரச்னையும் ஏற்படாமல் தடுக்க, முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து, மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், மாநகராட்சியின் பல துறைகளின் கமிஷனர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
துஷார் கிரிநாத் பேசியதாவது:
மழை பாதித்த இடங்களில், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மீது, இம்முறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சாய் லே - அவுட், பை லே - அவுட், கேந்திரிய விஹார் குடியிருப்பு, கோகிலு கிராஸ், இப்பலுார் சந்திப்பு, அப்பிகெரே, மைசூரு சாலை உட்பட மழைநீர் தேங்கும் பகுதிகளில் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
நகரில் 209 இடங்களில் வெள்ள பாதிப்பு பிரச்னை உள்ளது. ஏற்கனவே 166 இடங்களில் வெள்ள பாதிப்பை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கும் பகுதிகளை உடனடியாக ஆய்வு செய்து அங்கு உள்ள மக்கள் பிரச்னைகள் தீர்க்க வேண்டும். நகரின் முக்கிய சாலைகளில் 180 இடங்களில் மழைநீர் தேங்கும் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது. அந்த இடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து கொள்ளுங்கள். மழைக்காலத்திற்கு தேவைப்படும் பொருட்களை அங்கு வைத்து கொள்ள வேண்டும். தீயணைப்பு நிலையங்களுடன் தொடர்பில் இருங்கள். சாக்கடை கால்வாயில் தண்ணீர் சீராக செல்ல நடவடிக்கை எடுங்கள். மழையால் விடும் மரங்கள், மரக் கிளைகளை அகற்ற 30 குழுக்கள் உள்ளனர். அவர்கள் பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களுக்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தங்கவயல்
தங்கவயலில் ஒரு வாரமாக, 35, 36 டிகிரி செல்ஷியஸ் வெப்ப அளவு பதிவாகி இருந்தது. வெளியில் நடமாட முடியாமல் பெரிதும் சிரமமாக இருந்தது. இளநீர், தர்பூசணி, பழரசம் விற்பனை அதிகமாக இருந்தது.
இந்நிலையில், நேற்று காலை 10:30 மணிக்கு சாரல் மழை பெய்ய துவங்கியது. மதியம் 12:30 மணி வரை விடாமல் பெய்தது. இதனால் ஒருவாரமாக பாடாய்படுத்திய கோடை வெப்பம் தணிந்தது. மாலையில் சில்லென காற்று வீசியது. மாலையிலும் மேக மூட்டமாகவே இருந்தது.