/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாநகராட்சி வெட்டி செலவு; பெங்களூரு மக்கள் அதிருப்தி
/
மாநகராட்சி வெட்டி செலவு; பெங்களூரு மக்கள் அதிருப்தி
மாநகராட்சி வெட்டி செலவு; பெங்களூரு மக்கள் அதிருப்தி
மாநகராட்சி வெட்டி செலவு; பெங்களூரு மக்கள் அதிருப்தி
ADDED : ஏப் 07, 2025 10:22 PM

பெங்களூரு; மாகடி சாலையின் சுரங்கப்பாதையில், 3 கோடி ரூபாய் செலவிட்டு தேவையின்றி அதிக வெளிச்சம் கொண்ட மின் விளக்குகள் பொருத்தி, பெங்களூரு மாநகராட்சி குளறுபடி செய்துள்ளது.
பெங்களூரில் சாலைப் பள்ளங்களால், தினமும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மழைக்காலத்தில் சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி, மக்கள் பரிதவிக்கின்றனர். சாலைப் பள்ளங்களை மூட, சுரங்கப் பாதைகளை சீரமைக்க பணம் இல்லை என, பெங்களூரு மாநகராட்சி திணறுகிறது. ஆனால் வீண் செலவு செய்வதில், அதிக ஆர்வம் காட்டுகிறது.
பெங்களூரின், மாகடி சாலையில் டோல் கேட் சுரங்கப் பாதையில், 3 கோடி ரூபாய் செலவில் மின் விளக்குகள் பொருத்தப்படுகின்றன.
இந்த சுரங்கப் பாதை ராஜாஜிநகர், மல்லேஸ்வரம், விஜயநகர், கோவிந்த நகர் இடையே இணைப்பு ஏற்படுத்துகிறது.
துபாய், டில்லி, ஹைதராபாத் உட்பட பல்வேறு நகரங்களை போன்று, மாகடி சாலையின் சுரங்கப்பாதையை மேம்படுத்துவதாக கூறி, பெங்களூரு மாநகராட்சி பணத்தை வீணாக்குவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மின் விளக்குகள் பொருத்துவது, பெயின்ட் அடிப்பது என, 180 மீட்டர் நீளமான சுரங்கப்பாதை மேம்பாட்டுக்கு இவ்வளவு செலவிடுவது, மக்களின் அதிருப்திக்கு காரணமாகியுள்ளது. ஏற்கனவே சுரங்கப்பாதையின் ஒரு பக்க சுவற்றில் எல்.இ.டி., புரொபைல் லைட்டிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய லைட்டிங் வசதி சுரங்கப்பாதைக்கு அவசியம் இல்லை. இரவு நேரத்தில் வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களின் கண்களை கூச வைக்கும். இது விபத்துக்கு காரணமாகும் என, பைக் ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இரவு நேரத்தில் சுரங்கப்பாதைகள், அழகாக தெரிய வேண்டும் என, துபாய் உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் எல்.இ.டி., புரொபைல் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.
அதேபோன்று பெங்களூரிலும், மின் விளக்குகள் பொருத்தப்படுகின்றன. சோதனை முறையில் மாகடி சாலையின் சுரங்கப்பாதையில் பொருத்தப்படுகின்றன.
சுரங்கப்பாதை சுவர்களுக்கு ஆண்டுதோறும், பெயின்ட் அடிப்பதை தவிர்க்க ஏ.சி.பி., பெயின்ட் பூசப்படுகிறது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் இருக்கும். புகை, துாசி, நீரால் இந்த பெயின்ட் போகாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.