ADDED : ஜூன் 08, 2026 11:14 PM

ஹாசன்: பெங்களூரு ரவுடி மன்ஜேஷ், நேற்று காலை ஹாசன் நீதிமன்றம் முன் படுகொலை செய்யப்பட்டார்.
பெங்களூரை சேர்ந்தவர் ரவுடி மன்ஜேஷ், 43. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவரின் தாய் ஹாசனை சேர்ந்தவர். தனிப்பட்ட விஷயமாக நேற்று ஹாசனுக்கு மன்ஜேஷ் சென்றிருந்தார்.
சென்னபட்டணாவில் உள்ள மாவட்ட நீதிமன்றம் அருகில் காரில் சென்று கொண்டிருந்தார். அவரின் காரை இரு சக்கர வாகனத்தில் வழிமறித்த மர்ம நபர்கள், அவரை காரில் இருந்து வெளியே இழுத்து போட்டனர்.
பின், அரிவாள்களால் சரிமாரியாக, வெட்டினர். குறிப்பாக அவரின் முகத்தில் விழுந்த பல வெட்டு காயங்களால் முகம் சிதைந்து போனது. அவர் இறந்ததை உறுதி செய்த பின், குற்றவாளிகள் அங்கிருந்து தப்பியோடினர்.
தகவல் அறிந்த ஹாசன் நகர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை பிடிக்க சிறப்பு படை அமைத்துள்ளனர்.
சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
நகரில் நீதிமன்றம் முன்பாக நடந்த படுகொலையால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
