பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற சதி திட்டம் கைதான 2 தீவிரவாதிகள் குறித்து 'திடுக்'
பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற சதி திட்டம் கைதான 2 தீவிரவாதிகள் குறித்து 'திடுக்'
ADDED : ஜூன் 08, 2026 11:14 PM
பெங்களூரு: துமகூரு போலீசாரால் கைது செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் இருவர், இந்தியாவில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற, இளைஞர் குழுவை தயார் செய்தது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இது குறித்து, உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன், தொடர்பில் உள்ள இருவர் கர்நாடகாவின் துமகூரில் வசிப்பதாக, மத்திய உளவுத்துறை தகவல் தெரிவித்தது.
இதையடுத்து, துமகூரு போலீசார், துமகூரின், ஸ்ரீராமநகரில் வசிக்கும் அல்லாபக்ஷு என்பவரை, சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். விசாரணையில் இவர் கொடுத்த தகவலில், தாவணகெரேவின், பீடி காலனியில் வசிக்கும் ஜமீர்கான் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இவர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது. அல்லாபக்ஷுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ராணா, இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமானார். இவரது உணர்ச்சிகரமான பேச்சுகளால், அல்லாபக்ஷு துாண்டப்பட்டார்.
'எந்த வேலையாக இருந்தாலும், நீ என்னை சகோதரனாக நினைத்து கொள். நான் அந்த வேலையை செய்து கொடுப்பேன்' என, வாக்குறுதி அளித்துள்ளார்.
அது மட்டுமின்றி, 'நம் மதத்தை வெறுப்போரை அழிக்க வேண்டும். இதற்காக, 50 முதல் 60 பேர் கொண்ட இளைஞர்கள் படையை தயார் செய்து, அவர்களுக்கு பயிற்சி அளியுங்கள். இதற்கு தேவையான பணத்தை, நான் கொடுக்கிறேன்' என, அல்லாபக்ஷுக்கு ஆசை காட்டியுள்ளார்.
அப்போது இவர், 'நீ இந்தியாவில் வேறு யாருடனாவது, தொடர்பில் இருக்கிறாயா' என கேட்டுள்ளார். இவ்வேளையில் ராணாவே, தாவணகெரேவின் ஜமீர்கானை, அல்லாபக்ஷுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். ராணா மற்றும் அல்லாபக்ஷு இடையே, ஹிந்தியில் நடந்த உரையாடல் விபரங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளன. ராணாவின் வழிகாட்டுதலின்படி, அல்லாபக்ஷு, ஜமீர்கான் செயல்பட்டுள்ளனர். இந்தியாவில் பயங்கரவாத செயல்களை நிகழ்த்த, இளைஞர் படையை தயார் செய்து வந்தனர்.
இது மத்திய உளவுத்துறைக்கு தெரிந்தது. உடனடியாக உஷாரான மத்திய உளவுத்துறை, மாநில உளவுத்துறைக்கு தகவல் அனுப்பியது. அதன்பின் துமகூரு போலீசாருக்கு விஷயத்தை கூறினர்.
அனைவரும் ஒருங்கிணைந்து, பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த இருவரை பிடித்தனர். விசாரணையில் இவர்களின் சதித்திட்டம் ஒவ்வொன்றாக அம்பலமாகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
