பெங்களூரு புறநகர் ரயில் திட்டம் சென்னை நிறுவனத்துடன் ஒப்பந்தம்
பெங்களூரு புறநகர் ரயில் திட்டம் சென்னை நிறுவனத்துடன் ஒப்பந்தம்
ADDED : மே 12, 2026 06:55 AM
பெங்களூரு: பெங்களூரு புறநகர் ரயில் திட்டத்தின் காரிடார் - 2 மற்றும் காரிடார் - 4க்கு, தேவையான 153 குளிர் சாதன ரயில் பெட்டிகளை வினியோகிக்கும்படி, சென்னை பெரம்பூர் 'இன்டெக்ரல் கோச் பேக்டரி'யுடன் பை - ரைட் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரின் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், பி - ரைடு நிறுவனம் பெங்களூரு புறநகர் ரயில் திட்டத்தின் காரிடார் - 2 மற்றும் காரிடார் - 4 அமைக்கிறது. இந்த வழித்தடங்களில் இயக்க தேவையான 153 குளிர்சாதன ரயில் பெட்டிகளை வினியோகிப்பது தொடர்பாக, சென்னையின் இன்டெக்ரல் கோச் பேக்டரியுடன், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது
இது குறித்து, பை - ரைடு நிர்வாக இயக்குநர் லட்சுமண் கூறியதாவது:
புறநகர் ரயில் திட்டம், வருங்காலத்தில் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு உதவியாக இருக்கும். சிறப்பான போக்குவரத்து வசதியாக இருக்கும்.
காரிடார் - 2 எல்லையில் வரும் சிக்கபானவாரா - யஷ்வந்த்பூர் பாதையில், நிர்ணயித்த நேரத்தில் ரயில் போக்குவரத்தை துவக்கும் நோக்கில், அடுத்த 18 மாதங்களுக்குள் பெட்டிகளை வினியோகிக்க வேண்டும் என, இன்டெக்ரல் கோச் பேக்டரிக்கு, காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இப்பெட்டிகள் மெட்ரோ ரயில் பெட்டிகளை போன்றிருக்கும்.
குளிர் சாதன ரயில் பெட்டிகளுக்கு, 1,513.75 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. காரிடார் - 2, காரிடார் - 4 டிராக் அமைப்பது, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிகளை முடிப்பதற்குள், பெட்டிகள் கிடைக்கும். பெங்களூரு மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த புறநகர் ரயில் திட்டம் தாமதமின்றி கிடைக்கும்.
இது நகரின் போக்குவரத்து நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காண, உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
