ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் நுகர்வில் பெங்களூரு முதலிடம்
ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் நுகர்வில் பெங்களூரு முதலிடம்
ADDED : மே 02, 2026 03:44 AM

பெங்களூரு: 'நாட்டிலேயே அதிகப்படியாக ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்களில் பெங்களூரு மக்கள் முதலிடத்தில் உள்ளனர்' என்று ஆன்லைன் டெலிவரி தளமான இன்ஸ்டாமார்ட்டின், 'கோடைகால போக்குகள் 2026' அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பான அறிக்கை:
கோடையின் ஆரம்ப மாதங்களான மார்ச், ஏப்ரல் மாதங்களில் குளிர்பானங்கள், ஐஸ்கிரீம்களுக்கான ஆன்லைன் ஆர்டர்கள் அதிகரித்து உள்ளன. நாடு முழுதும் பழங்கள், குளிர்பானங்கள், கோல்டு காபி, குளிர்பானங்கள் தேவை 300 சதவீதம் அதிகரித்து உள்ளது.
தின்பண்டங்கள் மட்டுமில்லை, மின் விசிறிகள் போன்ற சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும் சாதனங்களின் விற்பனையும், 280 சதவீதம் அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் சூரிய கண்ணாடிகளின் விற்பனை 650 சதவீதம் அதிகரித்து உள்ளது.
இந்தியர்கள் இரவு 9:00 மணிக்கு தான் அதிகளவில் ஐஸ்கிரீம் சாப்பிடுகின்றனர். மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் தேவை இரட்டிப்பாகி உள்ளது. இதுவே வார இறுதி நாட்களில் இன்னும் அதிகமாகிறது. இதில், பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.
ஐஸ்கிரீம் தேர்வில் நாட்டு மக்களின் விருப்பம் 'சாக்லேட் ஐஸ்கிரீம்' தான். இது ஒட்டுமொத்த ஆர்டகளில், 28 சதவீதமாகும். அதுபோன்று குடும்பத்துடன் சேர்ந்து சுவைத்து மகிழ வசதியாக, 'பேமிலி சைஸ் டப்' ஐஸ்கிரீம்களும் அதிகளவில் விற்பனையாகிறது.
ஐஸ்கிரீம், குளிர்பானங்களுடன் மோர், தர்பூசணி, கொய்யாப்பழம் உட்பட பழ ஜூஸ் விற்பனையும் அதிகரித்து உள்ளது. இதில், பெருமளவில் தயிரையே பலர் வாங்குகின்றனர்.
பெங்களூரை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், கோல்ட் காபி, மோர், மாம்பழம், ஐஸ்கிரீம், தயிர் ஆகியவற்றுக்கு மட்டும், 11,000 ரூபாய்க்கு மேல் செலவழித்து உள்ளார்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.
