தரமான எலக்ட்ரிக் அடுப்புகள் வாங்கும்படி 'பெஸ்காம்' அறிவுரை
தரமான எலக்ட்ரிக் அடுப்புகள் வாங்கும்படி 'பெஸ்காம்' அறிவுரை
ADDED : ஏப் 04, 2026 04:46 AM
பெங்களூரு: 'எலக்ட்ரிக் அடுப்புகள் வாங்கும் போது, விலையை மட்டும் பார்க்காமல், அவற்றின் தரத்தையும் பார்த்து வாங்க வேண்டும்' என,பெஸ்காம் அறிவித்து உள்ளது.
மேற்காசியாவில் நடக்கும் போரால், பெங்களூரில் சமையல் காஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், பலரும் எலக்ட்ரிக் அடுப்புகளை (induction stove) வாங்கி வருகின்றனர். ஒரே நேரத்தில் பலரும் வாங்குவதால், எலக்ட்ரிக் அடுப்புகளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. அதே சமயம், நகரின் பல பகுதிகளில் உள்ள கடைகளில் எலக்ட்ரிக் அடுப்புகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பலரும்,'ஆன்லைனில்' அடுப்புகளை வாங்கினர். சிலர் குறைந்த விலையில் உள்ள தரமற்ற எலக்ட்ரிக் அடுப்புகளையே வாங்குகின்றனர்.
இதுகுறித்து, பெஸ்காம் என்ற, பெங்களூரு மின்சார வினியோக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
எலக்ட்ரிக் அடுப்புகள் வாங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவற்றின் விலையை மட்டும் பார்த்து வாங்காமல், தரத்தையும் பார்த்து வாங்க வேண்டும். ஐ.எஸ்.ஐ., தரச்சான்றிதழ் பெற்ற அடுப்புகளையே வாங்க வேண்டும். மூன்று ஸ்டார் ரேட்டிங் உள்ள அடுப்புகளையே வாங்கவும்.
அடுப்புகளில் தானாக அணையும் வசதி, குழந்தை பாதுகாப்பு உள்ளிட்டவை கட்டாயமாக இருத்தல் வேண்டும்.
எலக்ட்ரிக் அடுப்பை பயன்படுத்த, 15 ஆம்பியர் கொண்ட சாக்கெட்டை பயன்படுத்தவும். வீட்டின் மின் வயரிங்கில் கோளாறு இருந்தால் எலக்ட்ரிக் அடுப்பு பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. மூன்று பின் கொண்ட எலக்ட்ரிக் அடுப்புகளையே கட்டாயம் வாங்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
