ரூ.50,000 லஞ்சம் வாங்கிய 'பெஸ்காம்' இன்ஜினியர் கைது
ரூ.50,000 லஞ்சம் வாங்கிய 'பெஸ்காம்' இன்ஜினியர் கைது
ADDED : மே 19, 2026 11:40 PM

ஜே.பி.நகர்: கட்டடத்திற்கு மின் இணைப்பு கொடுக்க, 50,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, 'பெஸ்காம்' நிறுவனத்தின் உதவி இன்ஜினியர், கான்ட்ராக்டர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு ஜே.பி.நகரில் வசிப்பவர் ரகுராஜ். இவர் வணிக பயன்பாட்டிற்காக புதிதாக கட்டடம் கட்டி உள்ளார். இதற்கு மின் இணைப்பு வழங்க, ஜே.பி.நகர் பெஸ்காம் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.
விண்ணப்பத்தை பரிசீலனை செய்த உதவி இன்ஜினியர் மனோஜ்குமார், பெஸ்காம் கான்ட்ராக்டர் காந்தராஜ் மூலம் ரகுராஜை அணுகினார்.
மின் இணைப்பு வழங்க, 50,000 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று மனோஜ் குமாரும், காந்தராஜும், ரகுராஜிடம் கேட்டனர்.
இதுகுறித்து லோக் ஆயுக்தா எஸ்.பி., சிவபிரகாஷ் தேவராஜிடம், ரகுராஜ் புகார் செய்தார்.
அவருக்கு சில அறிவுரைகளை வழங்கிய லோக் ஆயுக்தா போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.
மனோஜ்குமார், காந்தராஜை நேற்று சந்தித்த ரகுராஜ், ரசாயன பவுடர் தடவி இருந்த ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்.
பணத்தை வாங்கிய போது, அங்கு வந்த லோக் ஆயுக்தா போலீசார், இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
