அனுமதி பெறாமல் சாலைகளை தோண்டினால் அபராதம் பெஸ்காம், குடிநீர் வாரியத்துக்கு ஜி.பி.ஏ., எச்சரிக்கை
அனுமதி பெறாமல் சாலைகளை தோண்டினால் அபராதம் பெஸ்காம், குடிநீர் வாரியத்துக்கு ஜி.பி.ஏ., எச்சரிக்கை
UPDATED : நவ 12, 2026 12:00 AM
ADDED : நவ 11, 2026 09:48 PM

பெங்களூரு: பெங்களூரில் தார் பூசப்பட்ட சாலைகள், சில நாட்களில் மீண்டும் தோண்டப்பட்டு பாழாகின்றன. இதற்கு, பெஸ்காம் எனும் பெங்களூரு மின் வினியோக நிறுவனம் மற்றும் பெங்களூரு குடிநீர் வாரியம் காரணம். இனி, அனுமதியின்றி சாலைகளை தோண்டினால், அபராதம் விதிப்பதாக, ஜி.பி.ஏ., எச்சரித்துள்ளது.
பெங்களூரில் சாலைகளின் பள்ளங்களை மூடுவது தொடர்பாக, ஐந்து மாநகராட்சி களின் அதிகாரிகளுடன், ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மஹேஸ்வர்ராவ், காணொலி காட்சி வழியாக நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதில் அவர் பேசியதாவது:
புதிதாக தார் பூசப்பட்ட சாலைகளை, பெஸ்காம், குடிநீர் வாரியம் தோண்டி பணிகள் நடத்துகின்றன; சாலைகளை மீண்டும் சரி செய்வதில்லை. இதனால் சாலைகள் பாழாகின்றன. இனி, பெஸ்காம், குடிநீர் வாரியம் உட்பட, எந்த துறைகளாக இருந்தாலும், மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் சாலைகளை தோண்டக் கூடாது. முன் கூட்டியே அனுமதி பெறாமல் சாலைகளை தோண்டினால், அபராதம் விதிக்கப்படும்.
அனுமதி பெறாமல் சாலைகளை தோண்ட, மாநகராட்சி அதிகாரிகள் வாய்ப்பு அளிக்க கூடாது. ஜி.பி.ஏ., எல்லைக்கு உட்பட்ட ஐந்து மாநகராட்சிகளில், சாலை பள்ளங்களை மூடும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
குறிப்பாக, பிரதான சாலைகளின் பள்ளங்களை அடையாளம் கண்டு, விரைந்து மூட நடவடிக்கை எடுங்கள்.
அந்தந்த மாநகராட்சிகளின் எல்லையில் நடக்கும், ஒயிட் டாப்பிங் பணிகளிலும் தாமதம் செய்ய கூடாது.
சாலைகளில் பள்ளங்கள் இல்லாமல் பார்த்து கொள்ளவும். வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட கூடாது. ஒப்பந்த காலகட்டம் முடியாத சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டால், அவற்றை மூடும்படி ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடுங்கள்.
சாலை பள்ளங்களை மூடும் பணிகள் நடக்கும் இடங்களை, அந்தந்த மாநகராட்சி உயர் அதிகாரிகள், நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். பணிகள் முடிந்த பின், இதை பற்றி டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பதிவிறக்கம் செய்யுங்கள்.
வெளிவட்ட சாலையின் இம்மடிஹள்ளி சாலையில், குடிநீர் வாரியத்தின் பைப்லைனில் இருந்து, நீர் கசிவதாக தகவல் வந்துள்ளது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுது பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
