/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பரதநாட்டிய கலைஞர் தொடர்ந்த வழக்கில் கணவர் மீது விசாரணை நடத்த உத்தரவு
/
பரதநாட்டிய கலைஞர் தொடர்ந்த வழக்கில் கணவர் மீது விசாரணை நடத்த உத்தரவு
பரதநாட்டிய கலைஞர் தொடர்ந்த வழக்கில் கணவர் மீது விசாரணை நடத்த உத்தரவு
பரதநாட்டிய கலைஞர் தொடர்ந்த வழக்கில் கணவர் மீது விசாரணை நடத்த உத்தரவு
ADDED : ஜூன் 13, 2025 11:17 PM
பெங்களூரு: திருமணத்துக்கு பின்னரும் வேறு பெண்களுடன் தொடர்பு வைத்ததுடன், இயற்கைக்கு மாறான உறவுக்கு அழைத்ததாக பரதநாட்டிய கலைஞர் தொடர்ந்த வழக்கில் கணவர் மீது விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடையை கர்நாடக உயர்நீதிமன்றம் நீக்கியது.
பெங்களூரை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர், 2022ல் நண்பர்கள் மூலம் அறிமுகமானவருடன் நட்பாக பழகினார். இது காதலாக மாறியது. 2023ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
ஓராண்டுக்குள் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பெரியவர்கள் சமாதானம் செய்ய முயற்சித்தும் பலனளிக்கவில்லை.
அதேவேளையில், கணவர், மாமனார், மாமியார் மீது, கோத்தனுார் போலீசில், பரதநாட்டிய கலைஞர், குடும்ப வன்முறை புகார் அளித்தார். இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கணவர் மனுத் தாக்கல் செய்தார். நீதிமன்றம், மனைவியின் புகார் மீது இடைக்கால தடை விதித்தது.
இந்த தடையை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனைவி மேல்முறையீடு செய்தார். இம்மனு நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
பரதநாட்டிய கலைஞர் தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'மனுதாரரின் கணவருக்கு வேறு பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருக்கிறது. அதுமட்டுமின்றி, எந்நேரமும் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அத்துடன் மனுதாரரின் கையை முறுக்கி தாக்கி உள்ளார். இதற்காக மருத்துவமனையில் மனுதாரர் சிகிச்சையும் பெற்றுள்ளார்.
''மருத்துவமனை தகவலின்படி, கையை திருப்பியதால் காயம் ஏற்பட்டு உள்ளது என்பது தெளிவாகிறது. மனுதாரர், பரதநாட்டி கலைஞராக உள்ளார். அவர் இனி நடனமாடக்கூடாது என்று அவரது மாமனார், மாமியார் வற்புறுத்தி உள்ளனர். மனுதாரர் கேட்கவில்லை. இதனால் கோபமடைந்த அவர்கள், மனுதாரரை ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளார். எனவே, கணவர் மீது அளிக்கப்பட்ட புகாருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்' என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா, நேற்று அளித்த தீர்ப்பு:
கணவன் - மனைவி இடையே நடந்த வாட்ஸாப் உரையாடல், மிகவும் பயங்கரமானதாக உள்ளது. அதை இங்கு வெளிப்படையாக கூற முடியாது. இயற்கைக்கு மாறான உறவுக்கு கணவர் அழைத்து கொடுமைப்படுத்தியது, இதன் மூலம் தெரிகிறது. இவர்களின் உரையாடல் மூலம், கணவரின் வாழ்க்கை தரம் தெரிகிறது.
மேலும், மனைவியின் கையை முறுக்கியதால் காயம் அடைந்ததாக, மருத்துவமனை அறிக்கையும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. திருமணமான ஓராண்டில் என்னென்ன ஆனது என்பதை மனுதாரர் விளக்கமாக கூறி உள்ளார். இதனால் மனுதாரருக்கு மனதளவிலும், உடலளவிலும் கொடுமைப்படுத்தியது தெளிவாக தெரிகிறது.
எனவே, கணவர் மீது தொடரப்பட்ட வழக்கிற்கு விதித்த இடைக்கால தடை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வழக்கை தொடர்ந்து விசாரிக்க உத்தரவிடப்படுகிறது.
மேலும், பரதநாட்டியம் ஆடக்கூடாது என்று கூறிய மாமனார், மாமியார் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.