ம.ஜ.த.,வில் இணைந்த ‘பிக்பாஸ்’ பிரபலம் 2 ஆண்டுகளில் மாநில பொதுச்செயலரானார்
ம.ஜ.த.,வில் இணைந்த ‘பிக்பாஸ்’ பிரபலம் 2 ஆண்டுகளில் மாநில பொதுச்செயலரானார்
UPDATED : அக் 07, 2026 12:00 AM
ADDED : அக் 06, 2026 07:44 PM
பெங்களூரு: கன்னட ‘பிக்பாஸ்’ முன்னாள் போட்டியாளருமான ஜான்வி, ம.ஜ.த.,வில் இணைந்த இரண்டு ஆண்டுகளில், மாநில பொதுச்செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
கன்னட பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர், திரைப்பட தொகுப்பாளரான இருந்தவர் ஜான்வி. 2024 மே மாதம், மத்திய அமைச்சர் குமாரசாமி முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார்.
கட்சியில் இணைந்த குறுகிய காலத்திலேயே, பைரமங்கலா விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பினார் அங்குள்ள, 9,500 ஏக்கர் வளமான நிலத்தை கையகப்படுத்தி, கிரேட்டர் பெங்களூரு ஆக மேம்படுத்தும் அரசின் திட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினார்.
விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி, அந்த திட்டத்தை செயல்படுத்தவிருந்த சிவகுமாருக்கு, சமூக ஊடகங்களில் நேரடியாக சவால் விடுத்தன் மூலம், கட்சியில் செல்வாக்கு மிக்க இளம் தலைவராக உருவெடுத்தார்.
இந்நிலையில், அவரின் செயல்பாட்டை பாராட்டி, அவரை மாநில பொதுச்செயலராக நியமித்து, அதற்கான சான்றிதழை மத்திய அமைச்சர் குமாரசாமி வழங்கியுள்ளார். பின், அவரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
ஒரு செய்தி தொடர்பாளராக துவங்கிய என் வாழ்க்கை பயணத்தில், இப்போது ம.ஜ.த.,வின் தீவிர பணியாளராகும் பாக்கியம் கிடைத்து உள்ளது.
என் மீது நம்பிக்கை வைத்து, இப்பெரிய பதவியை எனக்கு வழங்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு நன்றி. கட்சி அமைப்புக்காக மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இளம் தலைவர் நிகில் குமாரசாமி, கிரேட்டர் பெங்களூரு தலைவர் ரமேஷ் கவுடாவுக்கு நன்றி.
ஒரு பதவியை பெறுவதை மட்டும் நம் இலக்காக இருக்கக்கூடாது. மாறாக அந்த பதவிக்கு உரிய நீதியை வழங்குவதே நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன்.
என்னை அங்கீகரித்து இந்த பதவியை வழங்கிய கட்சிக்காக, முழு மனதுடனும், நேர்மையுடனும் பணியாற்றுவேன். கட்சி தலைவர்கள், தொண்டர்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவேன். விவசாயிகள், பெண்கள், மக்களுக்கான பணிகளை தொடர்ந்து செய்வதில் உறுதியாக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
